/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai high court 652_2.jpg)
குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவே, சட்டமன்றத்துக்கு குட்கா பொருட்கள் எடுத்துசெல்லப்பட்டன எனவும், சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை எனவும், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த வழக்கில், ஸ்டாலின் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், என்.ஆர்.இளங்கோ மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் வாதிட்டனர்.
அப்போது அவர்கள்,‘உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர். கு.க.செல்வத்துக்காக நாங்கள் ஆஜராகவில்லை. பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உரிமை மீறல் குழுத் தலைவராக இந்த பிரச்சனையை விசாரிக்கக்கூடாது.
உரிமை மீறல் பிரச்சனையில், சட்டமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை. பாரபட்சமான முறையில், முன்கூட்டியே தீர்மானித்தும், சபாநாயகர் உரிமை மீறல் பிரச்சனை எழுப்பி, உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே, சட்டமன்றத்துக்கு குட்கா பொருட்கள் எடுத்துசெல்லப்பட்டன. சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை. எந்த உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை.
சட்டமன்றத்துக்குள் கருத்துரிமை உள்ளது. கருத்து தெரிவித்ததற்காக உரிமை மீறல் பிரச்சனை எழுப்ப முடியாது. உரிமை மீறல் நோட்டீஸ் சட்டவிரோதமானது. இதில் நீதிமன்றம் தலையிட முடியும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதால், உரிமை மீறல் பிரச்சனை எடுக்கப்பட்டுள்ளது.
உரிமை மீறல் என முடிவெடுத்த சபாநாயகர், இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்பாமல் சட்டமன்றத்திலேயே விவாதித்திருக்க வேண்டும். சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனையை எடுத்து, உரிமைக் குழுவுக்கு அனுப்பியபோது, தங்கள் தரப்புக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என வாதிட்டனர். இதைத்தொடர்ந்துஇந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)