Greetings from the Chief Minister of Tamil Nadu for New Chairman of Tamil Nadu Congress Committee appointed

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கு. செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நியமித்து அறிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்புகளைக் காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்ததற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ். அழகிரியின் எதிர்காலப் பணிகள் சிறக்கவும் - காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம்! இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்!’ என்று பதிவிட்டுள்ளார்.