Skip to main content

“முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்” - முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆளுநர் நேரடி விமர்சனம்

 

Governor RN Ravi comments on Chief Minister Stalin's foreign visit

 

ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், “வெளிநாடு சென்று பேசுவதாலோ, நாம் கேட்டுக் கொண்டதாலோ முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துவிடாது” என்று முதல்வரை நேரடியாகவே விமர்சனம் செய்திருக்கிறார்.

 

மாநாட்டில் பேசிய அவர், “அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் உற்பத்தியை சீனாவிலிருந்து மாற்றி, தங்கள் வணிகம் மற்றும் உற்பத்தியை இடமாற்றம் செய்யக்கூடிய பகுதி மற்றும் நாடுகளைத் தேடுகின்றனர். அவர்கள் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம், உள்கட்டமைப்பை நாம் உருவாக்கிய விதம், நமது மின் உற்பத்தியை மேம்படுத்துதல், புதுமை மற்றும் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழலை உருவாக்கியது போன்றவையே இதற்கு காரணம். இன்று உலகின் முதல் மூன்று ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தியா இருக்கிறது. உலகிலேயே மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடு இந்தியா. இந்த மாற்றம் தொழிற்சாலைகளின் உற்பத்தியை இடமாற்றம் செய்வதற்கான, வருங்கால இலக்கு இந்தியா என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது.

 

நமது மாநிலத்தில், அவர்களை மேலும் மேலும் கவரக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். நாம் கேட்பதாலோ அல்லது அவர்களுடன் சென்று பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். அவர்கள் கடுமையாக பேரம் பேசுபவர்கள். நம் நாட்டில், அதைச் செய்யும் பல மாநிலங்கள் உள்ளன. சிறிய மாநிலமான ஹரியானாவில் நமது மாநிலத்திற்கு இணையான அந்நிய நேரடி முதலீடு (FDI) உள்ளது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான அத்தியாவசிய தேவை, திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதாகும். அப்போதுதான் இந்த வாய்ப்பை நாம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !