ADVERTISEMENT

அரசு நிகழ்ச்சியில் ஆளுநர் - எம்.எல்.ஏ. மோதல் ; இருதரப்பு கண்டனங்கள்

02:20 PM Oct 03, 2018 | sundarapandiyan



புதுவை அரசின் உள்ளாட்சித்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை 'திறந்தவெளி கழிப்பிடமற்ற பிரதேச'மாக அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

ADVERTISEMENT

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடந்த அவ்விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

'புரோட்டாகல்' படி தொகுதி எம்.எல்.ஏவும், அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகனுக்கு பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனாலும் கடைசி நேரத்தில் 10 நிமிடம் ஒதுக்கப்பட்டு வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டார்.

'தூய்மை இந்தியா திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை. அதிகாரிகள் சரியாக வேலை செய்வதில்லை, விளம்பர அரசியல்தான் நடக்கிறது' என அரசு, அதிகாரிகள், ஆளுநர் அன்பழகன் குற்றச்சாற்றுகளை அடுக்கியவாறே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

நேரம் கடக்க கடக்க கிரண்பெடியின் உத்தரவின்படி இரண்டு முறை துண்டுகள் சீட்டு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அன்பழகன் பேச்சை நிறுத்தவில்லை. கிரண்பேடி அருகில் வந்து அறிவுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.

கடுப்பான கிரண்பேடி மைக்கை நிறுத்த சொன்னார். மைக் நிறுத்தப்படவே ஆவேசமடைந்த அன்பழகன் மைக்கை எப்படி நிறுத்தலாம் என கிரண்பேடியிடம் தகராறு செய்தார்.

கிரண்பேடி அன்பழகனை வெளியேறச்சொல்ல, அன்பழகனோ கிரண்பேடியை வெளியேறுங்கள் என்றார். மேடையிலிருந்த ராதாகிருஷ்ணன் எம்.பியும், அமைச்சர் நமச்சிவாயமும் அன்பழகனை சாமாதானம் செய்தும் சமாதானமாகாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

அதன்பின்னர் அன்பழகன் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து அரசு விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் தெரிவித்தார். அதேபோல் நேரம் கருதி பலமுறை அறிவுறுத்தியும் பேச்சை தொடர்ந்ததால்தான் மைக்கை நிறுத்தவேண்டியதாகி விட்டது என கிரண்பேடி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே விழாவில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், 'புதுச்சேரி அரசின் தொடர் முயற்சியினால் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக புதுவை மாநிலம் மாறியுள்ளது. மத்திய அரசின் உதவியோடு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த அரசுக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக அன்பழகன் எம்.எல்.ஏ. சில குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் அவ்வாறு கூறுகிறார். அவரது தொகுதியில் மட்டும் 1080 கழிப்பிடங்கள் கட்ட நிதி வழங்கப்பட்டது. 400 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.

அவர் சிலவற்றை மறைத்து மக்கள் மத்தியில் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்கிறார். அதிகாரிகளைப்பற்றி அவர் குறைகூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்.

பொதுமேடையில் தகாத முறையில் எம்.எல்.ஏ. பேசுவது கண்டிக்கத்தக்கது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்றார்.

இதேபோல் 'மாநிலத்தின் முதல் குடிமகனான துணை நிலை ஆளுநரிடம் மக்கள் பிரதிநிதி என்றும், பொது மேடை என்றும் பாராமல் சுயநினைவு இழந்த நிலையில் அநாகரிகமாக நடந்து கொள்வதும், சமரசம் செய்த அமைச்சர்கள், எம்.பிக்களை அவமானப்படுத்துவது போல நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

அநாகரிகமான செயல்களை அன்பழகன் தொடர்ந்து செய்து வருகிறார்' என்று வன்னியர் வளர்ச்சி இயக்க தலைவர் விஜயகுமார் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் அன்பழகனை கண்டித்து வருகின்றனர்.

அதேசமயம், 'அரசு விழாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது, அவரது மைக்கை ஆப் செய்ய சொல்லியும், அரங்கை விட்டு வெளியேற சொன்னதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை அவமதிக்கும் செயலாகும். சட்டமன்ற உறுப்பினரை அவமதித்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசு விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆளும் அரசின் குறைபாடுகளை எதிர்த்து பேசும்போது ஒலிபெருக்கி அனைத்து அவமதித்ததை வன்மையாக கண்டிப்பதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இங்கு நடப்பது மக்களாட்சியா மன்னர் ஆட்சியா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் என்ற ஆளுமை மிகுந்த பதவியின் மாண்பை தனது அவசர செயல்பாடுகளால் அழித்து வருகிறார் கிரண்பேடி எனவும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சுவாமிநாதன் கண்டித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT