Advertisment

அரசு பணியிடங்களை குறைக்கத் துடிப்பதா? 5 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும்! ராமதாஸ்

அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது. அரசு பணியிடங்களை குறைக்கும் முடிவைக் கைவிட்டு, அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசுத் துறைகளில் தேவையற்ற பணியிடங்களை அடையாளம் கான ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அமைக்கப் பட்டதன் பின்னணி மற்றும் நோக்கம் குறித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

Advertisment

தமிழ்நாடு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது சுமார் 14 லட்சமாக இருந்தது. 2003-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 12 லட்சமாகக் குறைந்து விட்டது. அது இப்போது மேலும் குறைந்து 10 லட்சத்திற்கும் கீழ் வந்து விட்டது. தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அரசு பணியிடங்களை குறைக்க முயற்சி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஆண்டு இதுகுறித்த எண்ணத்தை அரசு வெளிப்படுத்திய போதே அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது.

தமிழக அரசு கடுமையான நிதிப்பற்றாக்குறையில் சிக்கித் தவிப்பதால் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, உடனடியாக எந்த பணியாளரையும் நீக்குவதோ, விருப்ப ஓய்வு வழங்குவதோ அரசின் நோக்கம் இல்லை என்றாலும் கூட, கூடுதலாக இருப்பதாக அடையாளம் காணப்படும் ஊழியர்களை பணி நிரவல் முறையில் வேறு இடங்களுக்கு மாற்றுவது, எதிர்காலத்தில் காலிப்பணியிடங்கள் ஏற்படும் போது அவற்றை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்புவதற்கு பதிலாக தற்காலிக பணியாளர்களை நியமிப்பது, பல பணிகளை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி அயல்பணி முறையில் வெளியாட்களைக் கொண்டு செய்வது ஆகியவை தான் தமிழக அரசின் நோக்கம். அதை நிறைவேற்றித் தருவதற்காகவே ஆதிசேஷய்யா தலைலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அரசு ஊழியர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசின் இந்த திட்டம் அரசின் சம்பளச் செலவுகளை வேண்டுமானால் கட்டுப்படுத்தும். ஆனால், வேறு வழிகளில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அரசு நிர்வாகத்தையே சிதைத்து விடும். அரசு நிர்வாகத்திற்கான மனித வளத்தை செலவுகளின் அடிப்படையில் மட்டும் தீர்மானிப்பது தவறாகும். அரசின் செலவுகளும் அரசு ஊழியர்களின் ஊதியமும் ஆண்டுக்காண்டு அதிகரிப்பது இயல்பானது தான். நிர்வாகத்தின் செலவுகள் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அதே அளவுக்கு அரசு வருவாயை அதிகரிக்க வேண்டும். அதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள, திறமையான அரசுக்கு அடையாளம் ஆகும். அரசின் செலவுகளை குறைக்கவும், வருவாயைப் பெருக்குவதற்கும் ஏராளமான வழிகள் உள்ளன.

ஒருபுறம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பல நூறு கோடிகளை வீணடிப்பது, பயனற்ற இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை வாரி இறைப்பது, ஆற்று மணல் விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.35,000 கோடி வருமானம் ஈட்ட வேண்டிய நிலையில், அந்த லாபங்களை சேகர் ரெட்டி போன்ற தனியாருக்கு திருப்பி விட்டு, அரசு கஜானாவில் ஆண்டுக்கு ரூ.86 கோடியை மட்டும் சேர்ப்பது என அரசு செலவுகளை பெருக்கி, வருமானத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, நிதி நெருக்கடியை கட்டுப்படுத்தத் துடிப்பது போல நடிப்பது வியப்பாக உள்ளது. சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் சுமார் ரூ.50,000 கோடி உபரி நிதி கணக்குக் காட்டப்பட்டு தனிநபர்களுக்கு ரூ.15,000 வரை போனசாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊழலை மட்டும் ஒழித்து விட்டால் அதை விட மடங்கு பணத்தை மக்களுக்கு கொடுக்கும் அளவுக்கு தமிழகத்தில் உபரி நிதி கிடைக்கும். ஆனால், ஊழலை ஒழிக்க முன்வராத தமிழக அரசு பணியிடங்களின் எண்ணிக்கையை குறைக்கத் துடிப்பது அபத்தத்திலும், அபத்தமாகும். அரசின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அரசு பணியிடங்களில் தேவையில்லாத பணியிடங்கள் என்று எதுவும் கிடையாது. இன்னும் கேட்டால் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு திராவிடக் கட்சிகள் புதிது புதிதாக அறிவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த இன்னும் அதிக பணியாளர்கள் தேவைப்படுவர். நலத்திட்டங்களுக்காக கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்விப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது. தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 79.78 லட்சம் பேர் படித்து விட்டு, அரசு வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 பேருக்கு அரசு வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. எனவே, அரசு பணியிடங்களை குறைக்கும் முடிவைக் கைவிட்டு, அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Ramadoss 5 lakh vacancies Government Workplaces
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe