/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_56.jpg)
வருகின்ற 15ஆம் தேதி செய்வாய் கிழமை முதல் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வான ஐ.ஐ.டி, ஜே.இ.இ போன்ற மத்திய அரசு தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பொதுபணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் விழாவில் பேசுகையில், “மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இந்திய நாட்டின் வரலாற்றில் தமிழகத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு அரசு பள்ளியில் படித்த 405 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கப்பெற்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளித்ததன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரியில் சோர்ந்தாலும் அதற்கான கல்வி கட்டணம் முழுவதும் அரசே ஏற்றுள்ளது. அடித்தட்டு மக்களின் குழந்தைகளை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வரும் செய்வாய்கிழமை 15ஆம் தேதி முதல் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வான ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போன்ற மத்திய அரசு தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் பட்டயக் கணக்காளர் தேர்வுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமுள்ள எதிர்காலமாக மாற்ற, உங்கள் வாழ்வு உங்கள் வளம் அனைத்தும் உங்கள் குழந்தைகளிடையே இருக்கிறது. குழந்தைகளை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்குவதற்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தமிழக முதல்வர் கல்வியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற முறையில் முப்பத்தி இரண்டாயிரம் கோடி நிதியை வழங்கியுள்ளார். இந்திய நாடே வியக்கத்தக்க அளவிற்கு கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.” என பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)