E.R.Eswaran

Advertisment

சிதம்பரம் மற்றும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிகளில், தனியார் கல்லூரிகளுக்கு இணையாகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டிக்கிறோம். மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்படும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில்ரூ.5.44 லட்சமும்ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் ரூ.3.85 லட்சமும் மருத்துவப் படிப்பிற்கான கட்டணமாக மாணவர்களிடத்தில் வசூலிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக இந்த இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டணம் நிர்ணயித்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் 13,670 ரூபாயாகவும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் 11,610 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, இந்த இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் லட்சக் கணக்கில் நிர்ணயித்திருப்பது ஏன்?.

Advertisment

அரசு இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் அதிகாரப்பூர்வமாக ஏற்று நடத்தி கொண்டிருக்கும் போது மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பிற்குவசூலிக்கப்படும் கட்டணத்தை தான் மாணவர்களிடத்தில் வசூலிக்க வேண்டும். ஆனால் லட்சக்கணக்கில் நிர்ணயித்திருப்பது பல்வேறு குளறுபடிகள் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்த இரண்டு கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் லட்சக் கணக்கான ரூபாய் கட்டணத்தைக் கட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், சிரமத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள். ஏழை எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகமாகப் பயிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் குளறுபடிகளால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இதுபோன்ற குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாகச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.