Skip to main content

கோரக்பூர் இடைத்தேர்தல் தோல்வியால் பா.ஜ.க. தலைவர்கள் உற்சாகம்?

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அம்மாநில முதல்வராக கோரக்பூர் தொகுதியில் ஐந்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

 

Yogi

 

உ.பி. மாநிலத்தையே காவிமயமாக மாற்றிக் காட்டிய அவர், தேசிய அளவிலும் பா.ஜ.க. சார்பிலான பிரச்சாரங்களில் கலந்துகொண்டு தன் செல்வாக்கினை வளர்த்துக்கொண்டார். ஆனால், எந்த இடத்தில் தனது அரசியல் அத்தியாயம் தொடங்கியதோ, அதே தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. அந்தத் தோல்வி எதிர்க்கட்சிகளிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தைத் தந்தது. ஆனால், அது சொந்தக் கட்சிக்குள்ளேயே உற்சாகத்தைத் தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

யோகியின் ஆட்சி தொடங்கியதில் இருந்து தலைத்தூக்கிய சில பா.ஜ.க. தலைவர்களின் அடாவடி மற்றும் அதீத நம்பிக்கைக்கு இந்தத் தோல்வி மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது. குறிப்பாக, யோகி ஆதித்யநாத்தின் தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டம் வலுவிழந்துவிட்டதாகவும், தங்களது நீண்டகால கட்சிப்பணிகளைப் பின்னுக்குத் தள்ளிய அவரது தொடர் வெற்றிக்கு இது தடையாக இருக்கும் எனவும் சில தலைவர்கள் கருதுகின்றனர். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள எம்.பி.க்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வரை இந்த உற்சாகம் நீண்டிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்