Advertisment

''இது நல்ல திட்டம் தான்... ஆனால்,எப்போது செயல்படுத்தப்படும்?''-பாமக அன்புமணி ராமதாஸ் கேள்வி!

pmk

'சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி.குறைந்தபட்சம் சுங்கக் கட்டணங்களை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்துவதையாவது மத்திய அரசு கைவிட வேண்டும்' என பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 50 சுங்கச்சாவடிகளில் 28 சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. சுங்கச்சாவடிகளின் கட்டண வசூல் வெளிப்படைத் தன்மை கொண்டதாக மாற்றப்படாத நிலையில், ஆண்டுதோறும் சுங்கக் கட்டணங்களை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

Advertisment

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர் உள்ளிட்ட 22 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. மீதமுள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சுங்கச் சாவடிகள் தொடர்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், சுங்கக் கட்டணத்தை நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து உயர்த்துவது அநீதியானது.

சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது அதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்; அதன்பின்னர் பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் விதி. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலானவை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அதேபோல் பெரும்பாலான சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டு விட்டது. அத்தகைய சாலைகளில் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தக் காரணத்தையும் கூறாமலேயே அனைத்து சாலைகளிலும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது எந்தவகையில் நியாயம்?

pmk

2008-ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் சுங்கக்கட்டணம் வசூல் சட்டத்தின்படி 60 கி.மீ தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 32 சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும். கடந்த 22.03.2022 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பான வினாக்களுக்கு விடையளித்த மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, அடுத்த 3 மாதங்களுக்குள் 60 கிமீக்கு ஒரு சுங்கச்சாவடி என்பது உறுதி செய்யப்படும் என்றும், கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். அதன்படி ஜூன் 22-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகள் உட்பட நாடு முழுவதும் ஏராளமான சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 26-ஆம் தேதியாகியும் அவை அகற்றப்படவில்லை.

மாறாக, இப்போது புதிய திட்டம் ஒன்றை மத்திய நெடுஞ்சாலைகள்துறை அமைச்சகம் முன்வைக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும்; அவற்றுக்கு மாற்றாக செயற்கைக்கோள் உதவியுடன் வாகனத்தின் எண் பலகையில் பொருத்தப்படும் கருவியின் வழியாக உரிமையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்தே நேரடியாக சுங்கக் கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது நல்ல திட்டம் தான். ஆனால், இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்? அடுத்த 6 மாதங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால், அதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை.

புதிய சுங்கக்கட்டண வசூல் முறைக்கு மாறுவதற்கு நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்த சட்டத்தை தயாரித்து, அமைச்சரவை ஒப்புதல் பெற்று இயற்ற பல மாதங்கள் ஆகும். புதிய தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கும், அதில் தேசிய நெடுஞ்சாலைகளை பதிவு செய்வதற்கும், அனைத்து வாகனங்களிலும் புதிய டிஜிட்டல் எண் பலகைகளை பொறுத்துவதற்கும் ஆண்டுக்கணக்கில் ஆகலாம். அதுவரை அளவுக்கு அதிகமான சுங்கச்சாவடிகளில், அளவுக்கு அதிகமாக கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதி நடைமுறைப்படுத்தப்படும் வரையிலோ அல்லது புதிய சுங்கக்கட்டண வசூல் தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலோ சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்; குறைந்தபட்சம் சுங்கக் கட்டணங்களை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்துவதையாவது மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என தெரிவித்துள்ளர்.

TOLLGATE pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe