விருதுநகர் அரசியல்: அந்தரத்தில் கோகுலம் தங்கராஜ்

Gokulam Thankaraj  virudhunagar politics

கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கோகுலம் தங்கராஜ், அரசியல் மோகத்தால் விருதுநகருக்கு ஜாகையை மாற்றி, அதிமுக எம்.எல்.ஏ.ஆக வேண்டும் என காய்நகர்த்தினார். விருதுநகர் அதிமுக மேற்கு மா.செ. ராஜேந்திரபாலாஜியின் கைங்கர்யத்தில், அது வெறும் கனவாகிப்போக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீர் அமமுக வேட்பாளராகி தோற்றுப்போனார். அதிமுக காலை வாரிவிட்டதும், அமமுக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றானதும், ஆளும் கட்சியான திமுகவுக்கு தாவினார். விருதுநகர் தொகுதியில் நலத்திட்டங்கள் என்ற பெயரில்வாரியிறைத்ததன் பலனாகஒரே ஒரு வார்டு கவுன்சிலர் சீட் பெற்று, நகர்மன்றத்தலைவராகி அனுபவித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், வார்டில் போட்டியிடும் வாய்ப்புகூட அவருக்கு கிடைக்காமல்போனது காலத்தின் கோலமே!

கோகுலம் தங்கராஜுவை திமுக நிராகரித்தது ஏன்?

நாடார் மஹாஜனசங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜுதான், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அழைத்துச்சென்று, தங்கராஜுவை திமுகவில் சேரவைத்தார். விருதுநகர் நகராட்சி தலைவர் பதவிபெண் பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் இருந்ததால், 22-வது வார்டில் போட்டியிட தனது மனைவி மாலா தங்கராஜுக்கு சீட் கேட்டிருந்தார். தற்போது விருதுநகர் நகராட்சி தலைவர் பதவி, யார் வேண்டுமானாலும் போட்டியிடும் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 35-வது வார்டில் தானே போட்டியிட்டுசேர்மனாகும் எண்ணத்தில் சீட் கேட்டார். ‘என்ன இது? மாற்றி மாற்றி சீட் கேட்கிறார்? பா.ஜ.க.வுக்கு போய்விட்டதாக வேறு பேச்சு கிளம்பியிருக்கிறது..’ என தங்கராஜ் மீது திமுக தரப்பு எரிச்சலடைந்த நிலையில், “நான் திமுகவில்தான் இருக்கிறேன். பா.ஜ.க.வுக்கு போவதாக வதந்தி கிளப்பிவிட்டார்கள்..” என்று தங்கராஜ் தன்னிலை விளக்கம் அளித்தார்.

Gokulam Thankaraj  virudhunagar politics

சரி, 35-வது வார்டிலாவது போட்டியிட தங்கராஜ் தயாரா? என்ற கேள்வி எழுந்தது. அந்த வார்டில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கார்த்திக் கரிக்கோல்ராஜ் சுயேச்சையாகப் போட்டியிடுவதை அறிந்த தங்கராஜ், நாடார் மஹாஜனசங்க பொதுச்செயலாளர் மனைவியை எதிர்த்துப் போட்டியிடுவது ‘ரிஸ்க்’ ஆயிற்றே என்று தயங்கினார். ஏனென்றால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்று, முன்புபோல கே.கே.எஸ்.எஸ்.ஆர்-க்கு ‘அல்வா’ கொடுத்து சேர்மனாகிவிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார், கார்த்திக் கரிக்கோல்ராஜ். இந்த அக்கப்போரில் மாட்டிக்கொள்ள, அரசியல் அரிச்சுவடியே அறியாத தங்கராஜுக்கு எப்படி துணிச்சல் வரும்?

கவுன்சிலருக்கு போட்டியிடுவதில் தங்கராஜுவுக்கு ஏற்பட்ட மகா குழப்பம் ஒருபுறம் என்றால், தனக்கு குழிபறிப்பதற்காகவே சேர்மன் சீட்டில் மாதவனை அமரவைப்பதற்காக சிட்டிங் திமுக எம்.எல்.ஏ. சீனிவாசன் காட்டிவரும் தீவிரம், மறுபுறம் நோகடித்தது. பிறகென்ன? உள்ளூரில் கழற்றிவிடப்பட்ட ‘கரகாட்ட கோஷ்டி’ லெவலுக்கு வந்துவிட்டார், தங்கராஜ்!

Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe