Skip to main content

மத்திய அமைச்சராகிறார் G.K.வாசன்?

 

 

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுகவும், அதிமுகவும் தங்களின் எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் திமுக திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரை மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவித்தது.

 

அதிமுகவில் இந்த பதவிகளை பெற கடும் போட்டி நிலவியது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரிலும், தங்களுக்கு வேண்டியவர்கள் மூலமும் தங்களுக்கு மாநிலங்களவை பதவி வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கியது போல் தங்களுக்கும் அதிமுக ஒரு இடத்தை ஒதுக்கும் என்ற நம்பிக்கையில் தேமுதிகவும் அதிமுகவிடம் வலியுறுத்தி வந்தது. தேமுதிகவின் சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை இதுதொடர்பாக நேரிலும் சந்தித்துப் பேசினார்.

 

ஆனால் அதிமுகவிலேயே இந்தப் பதவிகளை பிடிக்க பலத்த போட்டி இருந்தது. கே.பி.முனுசாமி, தம்பிதுரை, விஜிலா சத்தியானந்த், தமிழ் மகன்உசேன், அன்வர்ராஜா உள்ளிட்டவர்களும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசனும் வெளியே எந்தவித சத்தமும் இல்லாமல் அமைதியாக இந்தப் பதவிக்கு முயற்சி செய்து வருகிறார் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

 

இந்த நிலையில் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிட உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளனர்.

 


 

இதன் பின்னணி குறித்து விசாரிக்கும்போது, தேமுதிகவும், தமாகாவும் ராஜ்யசபா சீட்டுக்காக முயற்சி செய்து வந்தது. இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரும் பாஜக தலைமையிடம் சிபாரிசு செய்திருக்கின்றனர்.

 

 

அவர்கள் இருவரின் சிபாரிசுகளைத் தட்டிக் கழிக்க முடியாத பாஜக தலைமை, வாசனுக்காக அதிமுகவிடம் ஒரு இடத்தைக் கேட்க நினைத்தது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடந்து வருவதாலும், தமிழக சட்டமன்றத்தில் சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுமாறும் முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதால் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை கடந்த 2ஆம் தேதி டெல்லி சென்று சந்தித்துள்ளனர்.

 

அப்போது, தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இதனை உங்களால் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லையா? குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமே இல்லை. இதில் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை பிரதமர் மோடி தெளிவாக கூறியிருக்கிறார். அப்படியிருந்தும் போராட்டம் நடக்கிறது என்று அமித்சா கூறியிருக்கிறார்.

 

அதற்கு அதிமுக அமைச்சர்கள் இருவரும், தமிழக அரசின் முயற்சிகளை விளக்கிவிட்டு, எந்த சமாதானத்தையும் முஸ்லீம்கள் ஏற்காதநிலையில்தான் உங்களைச் சந்தித்து ஆலோசனை செய்ய வந்திருக்கிறோம் என்று சொல்லியுள்ளனர்.

 

அதற்கு அமித்சா, தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டத்தில் உங்களோட சப்போர்ட் இருக்கு, போராட்டம் நடத்துங்க ஆனா எங்களை எதிர்க்காதீங்க என முஸ்லீம் லீடர்களிடம் சொல்லியிருக்கீங்கன்னு எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது. எதற்காக இந்த டபுள் கேம் என கடுமையாப் பேசியிருக்கிறார்.

 

அதற்கு அதிமுக அமைச்சர்கள் இருவரும், அனுமதி தரவில்லை என்றால் கோர்ட்டுக்கு போறாங்க. அப்புறம் அனுமதி வழங்க வேண்டிய நிலைமை வருது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வழி இல்லையா என கேட்டிருக்கிறார்கள். அதற்கு அமித்சா, அந்தச் சட்டத்துக்கு எதிரா நீங்க தீர்மானம் நிறைவேற்றினாலும், நிறைவேற்றாவிட்டாலும் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியா இருக்கணும். அதுல சரியாக இல்லை என்றால் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார்.

 

இந்தச் சந்திப்பில் கடைசியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து பேசப்பட்டது. அப்போது, வாசனுக்கு ஒரு மாநிலங்களவை பதவி தர வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. அதோடு, நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததும் அதிமுக மத்திய அமைச்சரவையில் இணையலாம், அதற்கு உங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா என்று கேட்டுச் சொல்லவும் என்று கூறியுள்ளார் அமித்சா.


 

modi - gk vasan 

 

சென்னை திரும்பி அதிமுக அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் அமித்சா கூறியதை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாம் விசாரித்தபோது, மத்திய அமைச்சரவையில் தனது மகனை இணைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். கனவு காண்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆதரவால் மத்திய அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று வைத்திலிங்கம் கனவு காண்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கக் கூடாது. இப்போது மத்திய அமைச்சரவையில் இணைந்தால் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க பாஜக நிர்பந்தம் தரும். ஆகையால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என நினைத்தாராம். ஆகையால்தான் மாநிலங்களவை வேட்பாளர்களில் இரண்டு பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்களயும், ஒருவர் வாசனையும் முடிவு செய்தாரம் எடப்பாடி பழனிசாமி.

 

வாசனுக்காக ஏற்கனவே குரல் கொடுத்த பிரணாப் முகர்ஜியும், குஜராத் தொழில் அதிபரும் தற்போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது மத்திய அமைச்சராகிறார் வாசன் என்கின்றனர் தமாகாவினர்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்