Skip to main content

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக நேரடி போட்டி

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

GK Vasan has said   AIADMK will contest in Erode East by-election

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக  அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.

 

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தநிலையில், ஈரோடு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட விரும்புவதாகக் கூறப்பட்டது. 

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றிபெற முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றும் தெரிவித்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.