Skip to main content

“இல்லம் தேடி கல்வி.. இதற்கு அரசியல் சாயம் தேவையில்லை..” - ஜி.கே. வாசன்

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

GK Vasan comment about TamilNadu day

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (31.10.2021) திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. கலந்துகொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜி.கே. வாசன், “இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது மாணவர்களின் எதிர்காலம். மாணவர்களின் கல்வி என்பது நாட்டின் வளர்ச்சி. இதற்கு அரசியல் சாயம் தேவையில்லை. தமிழ்நாடு தினம் குறித்து தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. ஆகவே இது அனைவரையும் கலந்தாலோசித்து ஒத்த கருத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

 

ஒருபக்கம் கரோனா தாக்கம் இன்னும் முடியவில்லை, மறுபுறம் டெங்கு மலேரியா பரவிவருகிறது. இந்த நேரத்தில் டாஸ்மாக் பார்களைத் திறப்பது நியாயமில்லை. இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்துள்ள நிலையில், அங்கு பல்லாயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க இருப்பதாக தெரிகிறது. இது விவசாய பகுதிக்கு உகந்ததல்ல. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

 

முல்லைப் பெரியாறு அணையைத் திறந்து தண்ணீர் தர வேண்டியது அவசியம். அதேவேளையில், அணையில் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா விவகாரம் குறித்து அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் கருத்து கூறுவது முறையாக இருக்காது. அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை. ராஜீவ் கொலை குற்றவாளிகள் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்