Skip to main content

தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டி மவுன விரதம் கடைபிடித்தது ஏன்? ஜி.கே.மணி

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

 

வார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி குறித்தும், 8 வழிச்சாலை குறித்தும் பேசும் அழகிரி அவர்கள் தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு மவுன விரதம் கடைபிடித்தது ஏன்? என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

gkmani



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறி 5 மாவட்ட உழவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பெருந்துரோகத்தை செய்திருக்கிறது. அதை நியாயப்படுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இல்லாத காரணங்களை இருப்பதைப் போல சித்தரிப்பது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.

 

திமுகவுடன் கூட்டணி அமைத்ததாலோ என்னவோ காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசத் தொடங்கியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் வளர்ச்சிக்கு ஆதரவான கட்சி என்பதைப் போலவும், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ரூ.10,000 கோடி மதிப்பிலான அந்தத் திட்டம் வேறு மாநிலங்களுக்கு சென்று விடும் என்றும் பேசி வருகிறார். தங்கக் கத்தி என்பதற்காக அதை எப்படி வயிற்றில் குத்திக் கொள்ள முடியாதோ, அதேபோல் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டம் என்பதற்காக 8 வழிச் சாலைத் திட்டத்தை ஆதரித்து 10 ஆயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அப்படிப்பட்ட துரோகத்தை காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் செய்யும்; பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் செய்யாது.



 

8 வழிச்சாலைத் திட்டத்தால் தான் தமிழகத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என்று பேசும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஓர் அடிப்படையான வினாவுக்கு விடையளிக்க வேண்டும். சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்ல ஏற்கனவே இரு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி வழியாக சேலம் செல்லும் 179-ஏ என்ற எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை ரூ.515 கோடி செலவில் நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த பணிகள் முடிவடைந்தால்  சென்னையிலிருந்து சேலம் செல்ல மொத்தம் 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும். 3 நெடுஞ்சாலைகள்  இருக்கும் போது  நான்காவதாக மேலும் ஒரு நெடுஞ்சாலை தேவையா? அதுவும் குறிப்பாக 10,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறித்து இப்படி ஒரு சாலை அமைப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?

 

சரியான இழப்பீடு கிடைத்தால் 8 வழிச்சாலைக்காக நிலம் வழங்க விவசாயிகள் தயாராக இருப்பதாக கே.எஸ். அழகிரி கூறியிருக்கிறார். இவர் எப்போது விவசாயிகளின் பிரதிநிதியாக மாறினார் என்பது தெரியவில்லை. விவசாயிகளை இவர் எப்போது சந்தித்து இதுகுறித்து கருத்துக் கேட்டார் என்றும் புரியவில்லை. தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே 5 மாவட்ட உழவர்கள் போராடி வரும் நிலையில், அவர்கள் அதிக பணத்துக்காகத் தான் போராடுகிறார்கள் என்று கூறுவதை விட, மிகவும் மோசமாக உழவர்களை கொச்சைப்படுத்த முடியாது. தங்களைக் கொச்சைப்படுத்தும் அழகிரியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அழகிரி விரும்பினால், 5 மாவட்ட உழவர்களிடம் அவரை நான் அழைத்துச் செல்கிறேன். அங்குள்ள உழவர்கள் அதிக விலைக்காகத் தான் போராடுவதாக கூறினால், அரசியலை விட்டே நான் விலகிக் கொள்கிறேன். இல்லாவிட்டால் அழகிரி விலகுவாரா?

 

‘‘ஆணைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குதிரைக்கு குர்ரம்’’ என்பதைப் போல 8 வழிச்சாலைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்,  திண்டிவனம் & செஞ்சி - திருவண்ணாமலை ரயில் பாதைத் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டதை எதிர்க்கவில்லையே? என்று அழகிரி வினா எழுப்பியுள்ளார். 8 வழிச்சாலை திட்டத்தையும், திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை திட்டத்தையும் ஒப்பிடுவதை விட பெரிய அபத்தம் இருக்க முடியாது. 8 வழிச்சாலை திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம் என்று விவசாயிகளால் எதிர்க்கப்படும் திட்டம் ஆகும். அதேநேரத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை அந்தப் பகுதியில் வாழ்வாதாரத்தை பெருக்கும் என்று உழவர்களால் வரவேற்றுப் பாராட்டப்பட்ட திட்டம் ஆகும். தங்கள் ஊருக்கு தொடர்வண்டி வர வேண்டும் என்பதற்காக பல ஊர்களில் உழவர்கள் தாங்களாகவே முன்வந்து நிலங்களை வழங்கியது காங்கிரசின் புதிய தலைவர் அழகிரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 





ஏற்கனவே மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நகருக்கு தேவையின்றி நான்காவதாக ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுவதையும், அடிப்படை வசதிகளே இல்லாத பகுதியில் வளர்ச்சியை விரைவு படுத்துவதற்காக ரயில் பாதை அமைக்கப்படுவதையும் சமன்படுத்திப் பார்க்கும் அழகிரி போன்றவர்கள் தான் விவசாயிகளின் எதிரிகள். இந்த பாவத்தை அவராலும், காங்கிரசாலும் ஒருபோதும் கழுவ முடியாது.

 

வார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி குறித்தும், 8 வழிச்சாலை குறித்தும் பேசும் அழகிரி அவர்கள் தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு மவுன விரதம் கடைபிடித்தது ஏன்? 8 வழிச்சாலைக்கு ஆதரவாக பேசினால் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகி வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் தானே? வாக்குகளை வாங்கும் வரை ஒரு பேச்சு.... வாக்குகளை வாங்கி முடித்த பின்னர் வேறு பேச்சு என்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் நம்பிக்கை துரோகம் ஆகும். இதற்குக் காரணமான திமுக - காங்கிரஸ் அணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.