
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் மக்களுக்குப் பயனுள்ள சேவைகளை செய்துள்ள பல சாதனையாளர்களையும் அழைத்து அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, விருது வழங்கி பாராட்டி கௌரவப்படுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜெயலெட்சுமி, தனக்கு வந்த உதவியைப் போதும் என்று சொன்னதோடு, தனது கிராமத்து பெண்களின் நலன் கருதி கிராமத்துக்கே கழிவறைகள் கட்ட கேட்டுக் கொண்டதால், கிராமாலயா தொண்டு நிறுவனம் 136 கழிவறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. இந்தச் சிறுமியின் பெருந்தன்மையை, சேவை மனப்பான்மையைப் பார்த்து பலரும் பாராட்டி வரும் நிலையில், கடந்த மாதம் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி அவரது வீட்டிற்கே சென்று பாராட்டினார். இந்த நிலையில் இன்று (15.02.2021) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவியின் சாதனை சேவையைப் பாராட்டி சால்வை அணிவித்து விருது வழங்கினார்.
அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில், விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு உடற்பயிற்சி அளித்து, பலரை போலீஸாராகவும் விளையாட்டு சாதனையாளராகவும் சாதிக்க வைத்ததோடு, உயிர் காக்கும் குருதிக்கொடை வழங்க இளைஞர்களை உற்சாகப்படுத்தி, தினசரி 10 பேருக்கு ரத்த தானம் பெற்று பலரது உயிரைக் காக்கும் பணியைச் செய்துவரும் உடற்கல்வி பயிற்றுநர் முத்துராமலிங்கத்தையும் பாராட்டி பொன்னாடை அணிவித்து விருது வழங்கினார். இதே போல பல துறைகளிலும் தன்னலம் கருதாமல் சேவை செய்தவர்களைப் பாராட்டி விருது வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.