Skip to main content

செஞ்சி கோட்டையை கைப்பற்றுவாரா அமைச்சர் மஸ்தான்?

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

Senji local body election

 

செஞ்சி பேரூராட்சியின் தலைவராக தற்போதையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த 1986 முதல் 2016ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அதன் பிறகு 2016ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. மற்றும் 2021ஆம் ஆண்டும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் இருக்கிறார். 

 

இந்த நிலையில் 18 வார்டுகள் கொண்ட செஞ்சி பேரூராட்சியில், 11,497 ஆண் வாக்காளர்கள், 12,422 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 23,939 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு அதிமுக சார்பில் 18 வார்டுகளிலும், திமுக சார்பில் 17 வார்டுகளிலும் ஒரு வார்டில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகின்றன. மற்றும் பாஜக, நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுடன் சுயேச்சைகள் உட்பட 77 பேர் போட்டி களத்தில் உள்ளனர். 

 

இதில் அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, 6வது வார்டில் போட்டியிடுகிறார். அமைச்சரின் மனைவி சைத்தானி பீ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிறகு போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். நகரில் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய அமைச்சர் மஸ்தான், “தொடர்ந்து எனக்கு வெற்றியை தந்துள்ளீர்கள். அதேபோன்று நடைபெறவுள்ள பேரூராட்சி மன்றத் தேர்தலிலும் அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற வேண்டும். வெற்றிபெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் எமது துணைவியார் போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொண்டார். எனவே உங்களுக்காக தொடர்ந்து பாடுபடும் திமுக வெற்றி பெற வேண்டும்” என்று பேசினார். 

 

எப்படியும் 6-வது முறையாக திமுக பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மஸ்தான் முழுவீச்சில் தேர்தல் பணி செய்து வருகிறார். இந்த முறை எப்படியும் திமுகவிடம் இருந்து நாம் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். பிரமுகர் தொழிலதிபர் ரங்கநாதன் அவருடன் வழக்கறிஞர் அணியை சேர்ந்த கதிரவன் ஆகியோர் தீவிர தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க. எப்படியும் சில இடங்களில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் நகர தொழில் அதிபர்களில் ஒருவரான கோபிநாத் கடும் முயற்சி செய்து வருகிறார். 

 

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை கோட்டையில் கொடி ஏற்றிய திமுக, செஞ்சி கோட்டையை பிடித்து கொடி நாட்டுமா அல்லது அதிமுகவிடம் இந்த முறை கோட்டை விடுமா என்பது தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.

 

 

சார்ந்த செய்திகள்