தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 234 தொகுதியிலும் கூட்டணி கட்சியினரோடு போட்டியிட்டனர். ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவானது மே 2ஆம் தேதி வெளியானது. அதில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களி வெற்றிபெற்றுதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

Advertisment

இதில், அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைகிறது. மே 5ஆம் தேதி அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, 7ஆம் தேதியான இன்று காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

Advertisment

அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அத்துடன் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும் நேரடியாக கோபாலபுரம் இல்லத்திற்குச்சென்று தனது தாயாரிடம் ஆசீர்வாதம் பெற்றார். அதன் பின்னர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவிமரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், மதியம் 12 மணிக்கு மேல் தலைமைச் செயலகம் செல்லவுள்ள மு.க. ஸ்டாலின் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் படம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு தலைமைச் செயலகம் வரும் வாகனங்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்களின் உதவியோடு மருந்து தெளிக்கப்பட்டு, கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளோடு உள்ளே அனுமதித்துவருகின்றனர்.

Advertisment