Gayatri Raghuram, who has resigned from BJP, meets the press

Advertisment

பாஜகவின்அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத்தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சைதை சாதிக் பேசும்போது நாக்கை வெட்டுவேன் என்றார். அதேபோல் ஒரு சம்பவம் கட்சிக்குள் நடக்கும்போது அண்ணாமலை என்ன நடவடிக்கை எடுத்தார். திருச்சி சூர்யாவை இடைநீக்கம் செய்தார். ஆனாலும் திருச்சி சூர்யாவின் விலகல் கடிதத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலையே இப்படிப் பேசுகிறார். அப்பொழுது நாமும் பெண்களைத்தவறாகப் பேசலாம் என்ற எண்ணத்தைத்தான் கட்சியில் இருக்கும் மற்றவர்களுக்கும் இது கொடுக்கும்.

என்னை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்தார்கள். ஆனால் எதற்காகச் செய்தார்கள் என்று தெரிய வேண்டுமே. நியாயமாகத்தான் கேட்கிறேன். நான் கட்சிக்குக் களங்கம் விளைவித்தேன் எனச் சொன்னார்கள். இப்பொழுது அண்ணாமலை எவ்வளவு களங்கம் செய்கிறார். அதையெல்லாம் கேட்கமாட்டீர்களா. என்னை இடைநீக்கம் செய்த பின்புதான் அவர் ஏதேதோ கடிதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வருகிறார்.

Advertisment

தனிப்பட்ட விசாரணைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என எத்தனையோ முறை கேட்டுள்ளேன். விசாரணை வைத்திருந்தார்கள் என்றால் இவை அனைத்தும் கட்சிக்குள்ளேயே முடிந்திருக்குமே. யாருக்கு ஈகோ இருக்கு. இதை ஆணாதிக்கம் என்றுதானே சொல்ல முடியும்.

நான் என்ன தவறு செய்தேன் என என்னை அழைத்துச் சொல்லுங்கள். இடைநீக்கம் குறித்த கடிதத்தில் கட்சிக்குக் களங்கம் உண்டாக்கினேன் எனக் கூறியிருந்தனர். என்ன செய்தேன் என சொன்னால்தானே தெரியும். இதனால்தான் உங்களை இடைநீக்கம் செய்தேன் என ஆதாரத்துடன் காட்டினால் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அண்ணாமலை ஆதாரங்கள் இல்லாமல்தான் எப்பொழுதும் பேசுவார். அதுதான் உண்மை” எனக் கூறினார்.