Skip to main content

“தாய் அறியாமல் விடும் சாபம் ஆபத்தானது” - அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் எச்சரிக்கை

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

Gayatri Raghuram warns Annamalai

 

பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் காயத்ரி ரகுராம் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்றும் கூறியிருந்தார். 

 

இந்நிலையில் அண்ணாமலையின் அறிவுறுத்தலின் படி அவரது யூ டியூப் சேனல்கள் தன்னைப் பற்றி தவறாகப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறார்கள். வதந்திகளை கண்டு நான் பயப்படுவேன் என்று நீங்கள் நினைத்தால், im very sorry நான் பயப்படவில்லை. உனக்கு மட்டும் பெற்றோர் இருப்பது போல், வேறு யாருக்கும் பெற்றோர் இல்லாதது போல் நீங்கள் கல்லூரியில் பேசிய பேச்சுக்கு மகிழ்ச்சி.

 

அதே போல், நீங்கள் என்னை பற்றி பரப்பும் வதந்திகளை என் தாயும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பெண்களின் தாயும் உங்களை சபிக்க விரும்பாவிட்டாலும், அறியாமல் வரும் சாபம் ஆபத்தானது என்று சிந்தியுங்கள். உங்கள் தவறுகளுக்காக நீங்கள் வருந்துவீர்கள். நீங்கள் கர்மாவை எதிர்கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட மனித தாக்குதல் எனது கேள்விகளிலிருந்தும் மற்றும் எனது சவாலிலிருந்தும் திசை திருப்புவதற்காக மட்டுமே என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.கவில் புதிய பொறுப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Gayatri Raghuram new responsibility in ADMK

நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.கவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக பா.ஜ.க மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தார். அதனையடுத்து, அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியபோது, அவர் அக்கட்சியில் இணைவார் எனத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 

இந்த நிலையில், காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.க.வில் தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.கவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்