Advertisment

வெட்டி ஜம்பம் தவிர தி.மு.க. சாதித்தது என்ன? ஜி.கே.மணி

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வுகளை இரத்து செய்ய வலியுறுத்தி அறிவித்திருந்த போராட்டத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த வாக்குறுதியை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சி திரும்பப்பெற்றதை அரசியல் நாடகம் என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

Advertisment

gkmani

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு எந்தக் காலத்திலும் பொதுத்தேர்வுகளை நடத்தக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன்கூடிய, தரமான, கட்டாயக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் நிலைப்பாடு ஆகும். இந்த நிலைப்பாடுகளில் பா.ம.க. உறுதியாக உள்ளது. அதனால், தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளுக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்களை பா.ம.க. அறிவித்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர் அய்யா அவர்களை தொடர்பு கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வு நடைமுறைகள் தொடங்கி விட்ட நிலையில், அவற்றை ரத்து செய்ய இயலாது என்றும், அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் உறுதியளித்தார். இன்றைய சூழலில் இது தான் சாத்தியம் என்ற எதார்த்தத்தை உணர்ந்து கொண்டு போராட்டத்தை மருத்துவர் அய்யா அவர்கள் ரத்து செய்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை அரசின் வாக்குறுதியை பெரிய வெற்றியாகவே கருதுகிறது.

Advertisment

அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் துடிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வழக்கம் போலவே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் விமர்சித்திருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. ஆனாலும், பொதுத்தேர்வுகளுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்து அரசிடமிருந்து வாக்குறுதியை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழக சட்டப்பேரவையில் 100 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு வலிமையான எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்ளும் தி.மு.க., மாணவர்கள் நலன் சார்ந்த பொதுத்தேர்வு விவகாரத்தில் சாதித்தது என்ன?

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதை தடுக்கும் விசயத்தில் திமுக படுதோல்வியடைந்து விட்டது என்பதை அக்கட்சியின் சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவரது அறிக்கையில் 3 இடங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார். பொதுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று சட்டப்பேரவையில் உறுதியளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னாளில் அந்த உறுதிமொழியை மீறி பொதுத் தேர்வை அறிவித்ததாக தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

இப்படியொரு கருத்தைக் கூறுவதற்காக அவர் வெட்கப்பட வேண்டும். பேரவையில் ஓர் உறுதிமொழியை கொடுத்து அதை அமைச்சர் மீறினால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பேரவை விதிகளில் வழி உள்ளது. பொதுத் தேர்வை தடுக்கும் விசயத்தில் திமுகவுக்கு உண்மையான அக்கறை இருந்தால், உறுதிமொழியை மீறியதற்காக பேரவையில் தீர்மானம் கொண்டுவருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்கலாம். ஆனால், 100 உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக, பொதுத் தேர்வை தடுக்கும் விசயத்தில் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. பேரவை உறுப்பினர்களுக்கு சிற்றுண்டியும், காஃபியும் வேண்டும் என்பது போன்ற சமூக அக்கறை கொண்ட கோரிக்கைகளையெல்லாம் வலியுறுத்திய திமுக உறுப்பினர்கள், பொதுத் தேர்வுக்கு எதிராக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக்கூட கொண்டுவரவில்லை. ஒன்றுமில்லாத விசயங்களுக்கெல்லாம் வெளிநடப்பு செய்த திமுகவினர், 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக ஒருமுறைகூட வெளிநடப்புச் செய்ததில்லை. அவ்வளவு ஏன்?... குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவர் சட்டையைக் கிழித்துக் கொண்டுகூட வெளியில் வரவில்லை.

சட்டப்பேரவையின் முதன்மை எதிர்க்கட்சி திமுக தான். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதைவிட, விளம்பரம் தேடுவதில்தான் திமுக அதிக கவனம் செலுத்துகிறது. மாறாக, பாட்டாளி மக்கள் கட்சிதான் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பி உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்கிறது. பொதுத் தேர்வு விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பெற்ற வாக்குறுதியை விமர்சிக்கும் திமுகவுக்கு உண்மையாகவே மாணவர் நலனில் அக்கறை இருந்தால், தமிழகமே அதிரும் வகையில் போராட்டம் நடத்தி நடப்பாண்டிலேயே பொதுத் தேர்வை ரத்து செய்ய வைக்கட்டும். அவ்வாறு செய்தால் அதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கும். அதைச் செய்யத் தவறினால் எதிர்க்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம் என்று திமுக ஒப்புக்கொள்ளுமா? என்பதை தங்கம் தென்னரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

5th and 8 th std exam Thangam Thennarasu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe