puducherry cm narayanasamy

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள முதல்வர் அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சுற்றுலாத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகிய இரு துறைகளில் நடைபெற இருக்கும் பணிகள் குறித்தும், பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் கலந்தாய்வு கூட்டம் இன்று (17.08.2020) மதியம் நடைபெற்றது.

Advertisment

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் நிதித்துறை, மீன்வளத்துறை, சுகாதாரத்துறை, தொழில்துறை செயலாளர்கள், இயக்குனர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ செய்தி அறிக்கையில், புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதற்கு காரணம், மக்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் விழிப்புணர்வுடன் இல்லை. தனிமைப்படுத்தி கொள்ளாததால் தற்போது அதிகரித்து வருகின்றது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டவர்களைக் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக புதுச்சேரியில் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. நாளை காலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மருந்தகங்கள், பாலகம் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். நாளை மக்கள் நடமாட்டத்தைப் பொறுத்து மாற்றம் செய்யப்படும்.

ஏ.ஃஎப்.டி மில் விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால்தான் மில்லை மூடும் நிலைக்கு வந்தோம். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்பி மில்லை மூட கூறியுள்ளார். மூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அரசு கோரிக்கை. துணைநிலை ஆளுநர் தொடர்ந்து அரசு எந்தத் தொழில் நிறுவனங்களும் நடத்தக்கூடாது என்று மூடுவிழா நடத்தி வருகிறார். அதற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். ஏ.ஃஎப்.டி மில் மூடுவதற்கு முழு காரணமே துணைநிலை ஆளுநர் தான்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்து நிறுத்துகிறார் என்று அனைத்து மக்களுக்கும் தெரியும். மாநில அரசின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநர் தலையீடு உள்ளதாக மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளேன். இது குறித்து நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.