Skip to main content

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்குவதை நிறுத்தக்கூடாது! -அன்புமணி 

Published on 29/10/2020 | Edited on 29/10/2020
anbumani ramadoss

 

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்குவதை நிறுத்தக்கூடாது என்று பாமக இளைஞரணித தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் 11 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்களுக்கு நடப்பாண்டில் வழங்கப்பட வேண்டிய மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அரசின் இந்த முடிவு எந்த வகையிலும் நியாயமானதல்ல.

 

தமிழ்நாட்டில் 2011-12 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கலை & அறிவியல் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டும், மூன்றாம் ஆண்டும் பயிலும் மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் இரண்டு மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது இந்தத் திட்டம் 11&ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு  பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 11-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் பயனடைகின்றனர்.

 

நடப்பாண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மடிக்கணினிகள் மற்றும் மிதிவண்டிகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அந்தத் திட்டங்களை நடப்பாண்டில் மட்டும் கைவிட்டு, அதற்கான நிதியை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கொள்முதல் செய்வதில் தாமதத்தைக் காரணம் காட்டி இந்த இரு திட்டங்களையும் ஓராண்டிற்கு மட்டும் நிறுத்தி வைப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். மாணவர்களிடையே தேவையற்ற பதற்றத்தையும், கவலையையும் உண்டாக்கும். அது அவர்களின் கல்வித் திறனை பாதிக்கும்.

 

இப்போதுள்ள திட்டப்படி 11-ஆம் வகுப்பில் ஒரு மாணவருக்கு மடிக்கணினியும், மிதிவண்டியும் வழங்கப் பட்டால் அது அந்த மாணவர் பள்ளிக்கல்வியையும், கல்லூரிக் கல்வியையும் படிப்பதற்கு உதவியாக இருக்கும். நடப்பாண்டில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அடுத்த ஆண்டில், 11, 12 ஆகிய இரு வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை வழங்க வேண்டியிருக்கும். இது நிச்சயமாக குழப்பங்களை ஏற்படுத்தும். இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்ட முதல் இரு ஆண்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளின் மாணவர்களுக்கு மடிக்கணினிகளும், மிதிவண்டிகளும் வழங்கப் பட்ட போது பல குழப்பங்கள் ஏற்பட்டன என்பதை தமிழக அரசு அதிகாரிகளால் மறுக்க முடியாது.

 

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை பயனற்ற இலவசங்களை வழங்குவதில் உடன்பாடு இல்லை. அதேநேரத்தில் கல்வியைப் பொறுத்தவரை சிலேட்டுக் குச்சியில் தொடங்கி மடிக்கணினி வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள், நிழல் நிதிநிலை அறிக்கைகள் மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். மடிக்கணினி என்பது பள்ளிக்கல்விக்கு மட்டுமல்ல.... பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், உயர்கல்வி சார்ந்த தேடல்களுக்கும் மடிக்கணினி அவசியமாகும். அனைத்து தரப்பு மாணவர்களுக்கு இப்போது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு தேவையான செல்பேசி போன்றவற்றை வாங்கித் தர ஏழை பெற்றோர்களால் முடியவில்லை. அத்தகைய மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்குவது பெரும் உதவியாக  இருக்கும். மாறாக,  11-ஆம் வகுப்பில் வழங்கப்பட வேண்டிய மடிக்கணினியை ஓராண்டு தாமதித்து வழங்கினால் அது மாணவர்களின் பல்முனை வளர்ச்சிகளை நிச்சயமாக பாதிக்கும்.

 

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உச்சபட்ச அளவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டன. தமிழக அரசின் ஒப்பந்தங்கள், கொள்முதல்கள், பணி நியமனங்கள் அனைத்துமே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. எனவே, கொரோனா பரவலைக் காரணம் காட்டி இலவச மடிக்கணினி,  மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைக் கைவிடக் கூடாது. நடப்புக் கல்வியாண்டு நிறைவடைய இன்னும்  6 மாதங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், கொள்முதல் பணிகளை உடனடியாகத் தொடங்கி பொங்கல் திருநாளுக்குள் மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.