ADVERTISEMENT

துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்கும் பா.ஜ.க.! தமிழகத்தில் உ.பி. ஃபார்முலா!

06:42 PM Sep 14, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுவரை பார்த்திராத அளவுக்கு மதுரை நகரெங்கும் பா.ஜ.க.வினர் இந்தியில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். செப்டம்பர் 5 -ஆம் தேதி, மதுரை சிறுதூர் கோபாலகிருஷ்ணன் அரசு உதவிபெறும் பள்ளியில் பா.ஜ.க இளைஞரணி அறிமுகக் கூட்டமும், இளம் ராணுவத் தாமரை அறிமுகக் கூட்டம் என்ற பெயரில், காவிச் சீருடையுடன் உருவாக்கப்பட்ட படையையும் பா.ஜ.க. இளைஞரணி மாலத் தலைவர் வினோஜ் செல்வம் தொடங்கிவைத்தார். இந்த விழாவுக்குத்தான் இந்த அலப்பறை என்றார்கள் சொந்தக் கட்சியின் சீனியர்களே.

விழா மேடையில் தனிமனித இடைவெளியின்றி, மாஸ்க் அணியாமல் கூடியவர்கள், வினோஜ் செல்வத்தின் கையில் வேல், கதாயுதம், வாள் போன்றவற்றைக் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது திடீரென 'பாரத் மாதா கீ ஜே', 'ஜெய்ஸ்ரீ ராம்' என்று கத்தியபடியே மேடையேறிய சிலர், வினோஜ் செல்வத்தின் கையில் துப்பாக்கியொன்றைக் கொடுக்க, அவரும் அதை உயர்த்திக்காட்டி உற்சாக போஸ் கொடுத்தார். இந்தப் புகைப்படம் வைரலானதில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மதுரை மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மை அணிச் செயலாளர் வேதகிரி சால்கர் கையால் இந்தத் துப்பாக்கி கொடுக்கப்பட்டிருந்தாலும், இதை ஏற்பாடு செய்தவர் இளைஞரணி மாநிலச் செயலாளரான மதுரை சங்கரபாண்டியன்தான் என்பதால், அவரிடமே இதுபற்றி கேட்டோம். "ஒவ்வொரு மாவட்ட விழாவிலும் வில்-அம்பு- வேல் கொடுத்தார்கள். நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காக துப்பாக்கியைக் கொடுத்தோம். அது ஏர்கன். அதன் விலை வெறும் ரூ.1,500 மட்டுமே . எங்கள் சிறுபான்மை அணி பொறுப்பில் இருக்கும் வேதகிரி சால்கர், மதுரையில் உரிமம் பெற்ற துப்பாக்கிக் கடை வைத்திருக்கிறார். அதனால், மேடையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டோம். இதில் வில்லங்கமெல்லாம் எதுவும் கிடையாது'' என்றார்.

இந்தியில் போஸ்டர் ஒட்டியது குறித்து கேட்டபோது, "இந்தியாவில்தானே இருக்கிறோம். அப்ப இந்தியும் இருக்கும்தானே'' என்று முடித்துக்கொண்டார்.

துப்பாக்கியுடனான புகைப்பட போஸ் வைரல் விவாதமான நிலையில், வினோஜ் செல்வத்தைத் தொடர்பு கொண்டபோது, "அது வெறும் ஏர்கன். யாரையும் சுடமுடியாது. ஸ்டாலின், திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களுக்கு மேடைகளில் வீரவாள் கொடுக்கிறார்கள். அதுபோலத்தான் இதுவும்'' என்றார்.

"உ.பி. ஃபார்முலா அரசியலை தமிழகத்தில் நிகழ்த்திக்காட்ட, மதுரையில் பல்ஸ் பார்க்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்ன கொடுமையெல்லாம் பார்க்கணுமோ'' என்று புலம்புகிறார்கள் மதுரைவாசிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT