T. T. V. Dhinakaran

என்னுடைய முன்னாள் மாமா திவாகரன், துரோக கும்பலுடன் சேர்ந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஏஜண்டாக செயல்படுகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் சேலத்தில் கூறினார்.

Advertisment

அமமுக தலைவர் டிடிவி தினகரன், அமைப்பு நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சேலம் வந்திருந்தார். முன்னதாக இன்று (மே 20, 2018) காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறியது:

காவிரி மேலாண்மை ஆணையத்தை விரைவில் அமைத்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பில் என்னென்ன சொல்லியுள்ளதோ அனைத்தையும் மத்திய அரசு விரைந்து செயல்படுத்திட வேண்டும்.

இந்த நாட்டில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதனால்தான் கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தோம். எங்கேயும் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது.

Advertisment

எடியூரப்பா ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வழங்கியிருந்தாலும் குதிரைபேரம் நடந்திருக்கும். இந்த தீர்ப்பால் அது தடுக்கப்பட்டு உள்ளது.

என் முன்னாள் மாமா திவாகரனுக்கும், எனக்கும் சொத்துத் தகராறு காரணமாகத்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறுவது ஏற்க முடியாது. திவாகரன், சில துரோக கும்பலுடன் சேர்ந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஏஜண்டாக செயல்படுகிறார். இந்த இயக்கம் தனிநபர் இயக்கம் அல்ல. திவாகரனால் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்துவிட முடியாது.

முன்பு எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிராக பத்து எம்எல்ஏக்கள், முதல்வரை மாற்றும்படி கூறினர். அதற்காக அவர்களை அப்போது தகுதிநீக்கம் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வரை மாற்ற வேண்டும் என்று சொல்வோரை எல்லாம் கட்சித்தாவல் சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று தீர்ப்பு அளித்தது. அதேபோல்தான், தமிழகத்திலும் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று எங்களுக்கு சாதகமான தீர்ப்பு விரைவில் வரும்.

T. T. V. Dhinakaran

இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கிலும் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். இது தனிநபர் இயக்கம் அல்ல. யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு மாற்றாக எங்கள் இயக்கம் இருக்கும்.

சேலத்தில் எட்டுவழிச்சாலை அமைக்கும் திட்டதைக் கைவிட வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் மீதும், மக்கள் மீதும் அக்கறை இல்லை. அவர் எப்படியாவது முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக அவர் மத்திய அரசு சொல்லும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறார். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.