Skip to main content

“அளவுக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வைத்துள்ளார்” - புகார் மனு அளித்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பி!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

Former MLA's brother files complaint

 

இன்று (28/8/2021) 12 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் உ. தனியரசுவின் உடன்பிறந்த சகோதரர் தெய்வசிகாமணி என்ற நல்லரசு புகார் ஒன்றைக் கொடுக்க வந்தார். அதில், சொத்துக்களை அபகரித்ததுடன் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உரிய ஆதாரத்துடன் புகார் மனு அளித்தார்.

 

அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தனியரசுவின் சகோதரர் பேசியதாவது, “இன்று சொத்துக்கள் அபகரிப்பு தொடர்பான மனுவைக் கொடுக்க காவல் நிலையத்துக்கு வந்துள்ளேன். எங்களுடைய குடும்ப சொத்துக்களையும் கூட்டாக வாங்கிய சொத்துகளையும் 15 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும் அதிலிருந்து வரும் வருமானங்களை அவரே வைத்துக்கொண்டு, எங்களை அந்த இடங்களுக்குள் அனுமதிப்பதில்லை. அதேபோல் தொடர்ந்து எங்களை மிரட்டியும்வருகிறார். கடந்த ஆட்சியில் நான் தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என் மீது நிறைய கொலை மிரட்டல் இருந்ததன் காரணமாக நானும் இதுவரைக்கும் பயந்து யாரிடமும் சொல்லவில்லை.

 

Former MLA's brother files complaint

 

தற்போது திமுக தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தால், எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல்துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளேன். அது மட்டுமில்லாமல் கடந்த பத்து ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து வைத்துள்ளார். சுமார் 80 கோடிக்கும் மேலாக சொத்துக்கள் வைத்துள்ளார் அதற்கு உண்டான ஆவணங்களையும் புகார் மனுவில் இணைத்துக் கொடுத்துள்ளேன். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து நிலங்களை அளவீடு செய்து தவறான முறையில் சம்பாதித்ததை அரசுடமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது நடைபெறும் இந்த நேர்மையான ஆட்சி தொடர நான் வாழ்த்துகிறேன். இதனால் எனக்கும் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
ADMK former MLAs joined BJP

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் என 19 பேர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் பாஜகவில் இன்று (07.02.2024) இணைந்தனர்.

அதன்படி முன்னாள் எம்.எல்.ஏ.க்களான கந்தசாமி, சின்னசாமி, துரைசாமி, சேலஞ்சர் துரை, ரத்தினம், கோமதி சீனிவாசன், எஸ்.எம். வாசன், சந்திரசேகர், ஜெயராமன், முத்து கிருஷ்ணன், அருள், தங்கராசு, குருநாதன், ராஜேந்திரன் மற்றும் பாலசுப்ரமணியன் உட்பட 19 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.