“நாங்க என்னம்மா தப்பு செஞ்சோம்.. எங்கள ஏன்மா இப்படி செஞ்சீங்க..” - தேர்தல் களத்தில் செல்லூர் ராஜு

Former minister Sellur Raju spoke about AIADMK's election campaign.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஓட்டு கேட்கும் விதம் குறித்து செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்துதீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டன. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஈரோட்டில் அதிமுக வேட்பாளருக்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை எனச் சொல்லுவார்கள். அவர்களைப் போல் 1000 ரூபாய் கொடுத்து அனுப்ப எங்களுக்கு சக்தி இல்லை. அதனால் மக்களிடமே நாங்கள் கேட்கிறோம். 21 மாதங்களில் என்ன செய்துள்ளார்கள் எனக் கேட்கிறோம். நாங்கள் கொண்டு வந்த திட்டங்களில் ஏதாவது தவறு இருக்கிறதா எனக் கேட்கிறோம். அவர்கள் எங்கள் மேல் தவறு இல்லை எனச் சொல்கிறார்கள். அதனால் வாங்குவதை வாங்கி உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் எனச் சொல்கிறார்கள். அதனால் திண்ணை பிரச்சாரம் தான் எங்களால் செய்ய முடியும்.

அமைச்சராக இருந்தால் அவர்களைப் போல் செய்ய முடியும். நாங்கள் அப்படி எல்லாம் செய்ய முடியாது. ஓட்டு போடுங்கம்மா.. நாங்கள் என்னம்மா தப்பு செஞ்சோம். எங்கள ஏன்மா இப்படி செஞ்சீங்க எனக் கேட்கிறோம். மக்கள் முகமலர்ச்சியுடன் எங்களை வரவேற்கின்றனர். இங்கு எடப்பாடி அலை அடிக்கிறது. இந்த தேர்தல் திமுகவிற்கு சுனாமி தான். வாரி சுருட்டிடும். இத்தனை அமைச்சர்கள் போய் நாம், நமது மகன், சகோதரி என அனைவரும் சென்று வாக்கு கேட்டும் ஈரோட்டு மக்கள் இப்படி செய்து விட்டார்கள் என நாளை முதலமைச்சர் நிச்சயம் வருத்தப்படுவார். கவலைப்படுவார். இதன்மூலம் இனி ஆட்களை கவனமாகச் செயல்படச் சொல்லுவார்” எனக் கூறினார்.

admk
இதையும் படியுங்கள்
Subscribe