Skip to main content

நான்கு தொகுதியிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்த்து! உற்சாகத்தில் முன்னாள் அமைச்சர்...

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
natham r viswanathan

 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரித்து கட்சி வளர்ச்சிக்காக புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் நியமித்து வருகிறார்கள். அதுபோல்தான் திண்டுக்கல் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த மருதராஜ்க்கு கழக அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துவிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், வனத்துறை அமைச்சர் சீனிவாசனுக்கும் மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்து இருக்கிறார்கள்.

 

இதில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை மேற்கு மாவட்டமாக பிரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர். அதுபோல் மீதமுள்ள நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை கிழக்கு மாவட்டமாக பிரித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர். இப்படி திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மேற்கு என உருவாக்கி கட்சி வளர்ச்சியை பலப்படுத்தி இருப்பதை கண்டு ர.ர.க்களும் புது தெம்புடன் இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில்தான் புதிதாக கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

இதனைக் கண்ட விஸ்வநாதன், கரோனா காலம் என்பதால் வீட்டுக்கு வரச்சொல்வதை தவிர்த்துவிட்டு தொகுதியில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் நத்தம் அருகே உள்ள தனது என்.பி.ஆர். காலேஜுக்கு வாழ்த்து தெரிவிக்க வருமாறு கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து தான் நான்கு தொகுதிகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் சாரை சாரையாக என்.பி.ஆர். காலேஜ்க்கு படையெடுத்து சமூக இடை வெளியுடன் முககவசம் அணிந்து நத்தம் விஸ்வநாதனுக்கு சால்வை மாலைகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

இதில் தீவிர ஆதரவாளர்களான பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் முன்னாள் திண்டுக்கல் மாநகர கவுன்சிலர் திருமாறன் உள்பட சில ர.ர.க்கள் ஜெயலலிதா, இபிஸ், ஓபிஎஸ், விசுவநாதன் மற்றும் அவரது மாப்பிள்ளையான நத்தம் யூனியன் சேர்மன் கண்ணன் படங்களையும் முககவசத்தில் போட்டு அதை அணிந்தவாறு  பெருந்திரளாக வந்து வாழ்த்து பொக்கேக்களை வழங்கினார்கள். இப்படி வந்த கட்சி பொறுப்பாளர்களுக்கு ஸ்வீட், காரத்துடன் பாட்டில் தண்ணீர் மற்றும் டீ, காபியும் கொடுத்து அனுப்பி வைத்தனர். 

 

ஆரம்ப காலத்திலிருந்து விஸ்வநாதன் கட்சியில் இருந்து வந்ததால் சாணார்பட்டி யூனியன் சேர்மனை தொடர்ந்து, நத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நான்கு முறை தொகுதியை தக்கவைத்து, இரண்டு முறை முப்பெரும் துறை அமைச்சராக இருந்து தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுத்து நத்தம் தொகுதியை அதிமுக கோட்டையாக உருவாக்கி வந்தார்.

 

அதோடு மாவட்ட செயலாளராக இருந்ததாலும் மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களுக்கு டாஸ்மாக் பார் மற்றும் காண்ட்ராக்ட் பணிகளையும் கொடுத்தார். அதன் மூலம் கட்சி பொறுப்பாளர்களும் தங்களை வளர்த்துக்கொண்டு விசுவாசியாக மாறி வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சசியின் சதியால் தொகுதி மாறி ஆத்தூர் தொகுதியில் போட்டியிட ஜெ. சீட் கொடுத்ததின் மூலம் திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

 

அப்படியிருந்தும் மனம் தளராமல் தொடர்ந்து நத்தம் சட்டமன்ற தொகுதி மக்களின் நல்லது கெட்டதில் கலந்துகொண்டு, கோரிக்கைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்து கொடுத்ததுடன் மட்டுமல்லாமல், தன்னால் முடிந்த பண உதவிகளையும் செய்து கொண்டு தொகுதியில் ஒரு சிட்டிங் எம்எல்ஏ போலவே செயல்பட்டு வருகிறார். அதைக்கண்டு ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் கழக அமைப்பு செயலாளர் பதவியையும் கொடுத்தனர். அதன்பின் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட எடப்பாடி  வலியுறுத்தியும்கூட விஸ்வநாதன் மத்திய அரசியல் வேண்டாம் என்று மாநில அரசியல் போதும், அதுவும் உங்களோடும், துணை முதல்வரிடமும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி எம்.பி. சீட் வேண்டாம் என்றுகூறி தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்தார்.

 

இந்த நிலையில்தான், திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அதில் நான்கு தொகுதிகளை கொண்ட கிழக்கு மாவட்ட செயலாளராக நத்தம் விஸ்வநாதனை ஒபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் நியமித்தை கண்டு தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் நன்றியை மறக்காமல் வந்து வாழ்த்து கூறி, அவர்களிடம் தொடர்ந்து கட்சி பணியாற்றுங்கள் தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறேன் என்று  கூறி இருக்கிறார். அதை கண்டு பொறுப்பில் உள்ள  ர.ர.க்களும் உற்சாகத்துடன் தொகுதிகளில் களம் இறங்கி வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.