Former minister MR Vijayabaskar elected unopposed

Advertisment

கரூர் அதிமுக அமைப்புத் தேர்தலில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தலானது இன்று நடைபெற்றது. கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவைச் செயலாளர் இளங்கோவன், மற்றும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கரூர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது விருப்ப மனுவினை தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கினார். அவருக்கு எதிராக வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பதவிகளான மாவட்ட அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்காக அதிமுக தொண்டர்கள் விருப்ப மனு அளித்து வருகின்றனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சக அதிமுக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.