/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/90_41.jpg)
சேலத்தில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் அளித்திருந்தது. ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் தேர்வினை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அங்கீகரித்தது. இந்நிலையில் பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றோர் அதிமுக கொடியையோ அதிமுக என்ற பெயரைக் கூட சொல்லக்கூடாது.
ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது;கட்சியின் சின்னத்தை உபயோகிக்கக்கூடாது;போஸ்டரில் கூட அதிமுக என்ற பெயர், கட்சியின் சின்னம், கட்சியின் கொடி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. அந்த உத்தரவுகளை எல்லாம் மீறி ‘சட்டத்தை நாங்கள் மதிக்கமாட்டோம் சட்டம் என்ன செய்யும்’ என்ற வகையில், தான்தோன்றித் தனமாக ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் கட்சியின் கொடி, சின்னம், பெயர் போன்றவற்றை பயன்படுத்துவது, எம்ஜிஆர் மாளிகையின் முகவரியை அவ்வை சண்முகம் சாலை என்ற அலுவலகத்தினை லெட்டர் பேடில் பயன்படுத்துவது முழுவதுமாக சட்ட விரோதம்.
வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், வேண்டுமென்றே சட்ட ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற வகையில் ஓபிஎஸ் தரப்பினர் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். சேலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. எங்கள் கட்சியின் கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்தியதற்கு நாங்கள் புகார் அளிக்கிறோம். அதில் எங்களது கட்சிக்காரர்களையே அழைத்துச் சென்று விசாரிப்பதெல்லாம் நியாமில்லை. கொஞ்சம் கூட நியாயமற்ற செயல்” எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)