Advertisment

“தைரியம் இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்” - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

former admk mla vaiyapuri talk about Statehood for Puducherry

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர முடியவில்லை என்றால் முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும்” என அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க புதுச்சேரி மாநில துணை செயலாளருமான வையாபுரி மணிகண்டன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “அமைச்சர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்த போது என்னைப்பற்றி தனிநபர் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அந்த சந்திப்பில் புதுச்சேரி மக்கள் நலனைப்பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை பேசினாரா? அமைச்சர் லட்சுமி நாராயணன் புதுச்சேரியினுடைய நிழல் முதலமைச்சராக செயல்படுகிறார்.

Advertisment

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நான் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதவர்கள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.நான் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். இரண்டு முறையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டேன். ஆனால் என்னைப் பற்றி பேசிய அமைச்சர்கள் பல முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள நிலையில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டவர்கள்.

2016லிருந்து 21 வரை ஆட்சியில் இல்லாதபோது என்.ஆர் காங்கிரஸ் கட்சி மக்களுக்காக என்ன செய்தது, என்ன போராட்டங்களை நடத்தியது? எப்போதுமே மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக அ.தி.மு.க மட்டுமே உள்ளது. கடந்த காலங்களில் என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் மத்தியில் பல பொய்களைச் சொல்லி ஆட்சி நடத்தியதன் விளைவுதான் இரண்டு தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஒரு தொகுதியில் ஓட ஓட விரட்டப்பட்டார். வெற்றி பெற்ற ஒரு தொகுதியிலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இதனைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் தனி நபர் விமர்சனம் செய்வது தவறு. அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துத்தான் என்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்ட நிலையில், கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களைப் போட்டு வெற்றி பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியைப் பற்றியோ, கட்சியைப் பற்றியோ பேசத்தகுதி உள்ளதா எனப் புரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க வாக்குகளைப் பெற்று வென்ற என்.ஆர் காங்கிரசார் தைரியம் இருந்தால் அனைவரும் ராஜினாமா செய்து தேர்தலை சந்தியுங்கள். அ.தி.மு.கவும் 30 தொகுதியிலும் தனித்து நிற்கும். யார் அதிக இடங்களைப் பெறுகிறார்கள் எனப் பார்க்கலாம்.

முதல்வர் மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் எனக் கூறித்தான் ஆட்சிக்கு வந்துள்ளார். 2001ஆம் ஆண்டிலிருந்து 13 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக இருக்கும் ரங்கசாமி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர வேண்டும். செய்ய முடியவில்லை எனத்தெரிந்தும் ஏன் அந்த வாக்குறுதியை மக்களிடம் கொடுக்க வேண்டும். "செய் அல்லது செத்து மடி" என்பதைப் போல முதல்வர் மக்களைத்தொடர்ந்து ஏமாற்றாமல், மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தர வேண்டும், அவ்வாறு முடியவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மாநில அந்தஸ்து கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரை சந்தித்ததாக அமைச்சர் கூறியிருக்கும் நிலையில் பிரதமர் முடியாது எனச் சொல்லிவிட்டாரா? இது தொடர்பாக பாஜக தலைவர்உண்மைத்தன்மை குறித்து விளக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா கிடைக்காதா என்பதை மக்களுக்குத்தெளிவுபடுத்த வேண்டும்"எனக் கேட்டுக்கொண்டார்.

admk Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe