thirumavalavan1

Advertisment

தேர்தல் பிரச்சாரத்தைக் காரணம் காட்டி காவிரிப் பிரச்சனையை இழுத்தடிப்பதா? என்று மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை: ‘’காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நீதிமன்றம் விதித்த கெடுவின் அடிப்படையில் ஒரு செயல்திட்ட வரைவை மத்திய அரசு இன்று சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்துக்காக கர்நாடகா சென்று விட்டார். எனவே, கர்நாடகத் தேர்தல் முடியும் வரை அவகாசம் வேண்டுமென்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தேர்தல் பிரச்சாரத்தைக் காரணம் காட்டி தமிழ்நாட்டு மக்களின் உரிமையை மறுப்பது பாஜகவின் துரோகத்தையே எடுத்துக் காட்டுகிறது.

பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்தியில் ஆளும் மோடி அரசு இழுத்தடித்து வருகிறது. முதலில் ’ஸ்கீம்’ என்ற சொல்லுக்கு விளக்கம் கேட்டார்கள்; இப்போது தேர்தல் பிரச்சாரத்தைக் காரணமாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையை எந்த அளவுக்கு அவர்கள் கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரம் என்ற அடிப்படையில் பிரதமருக்கு அவகாசம் அளிக்கப்பட்டால் அது கர்நாடக முதலமைச்சருக்கும்தானே பொருந்தும். எனவே, மத்திய அரசின் நோக்கம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்பது அல்ல என்ற உண்மையைத்தான் இன்றைய நிகழ்வு காட்டுகிறது.

Advertisment

தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் உடனே திறந்துவிட வேண்டுமென்று தலைமை நீதிபதி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவர்கள் கூடுதலாகவே கொடுத்துவிட்டோம் எனச் சொன்னதால் அந்த விவரங்களை 8 ஆம் தேதி தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இது வழக்கின் கவனத்தை மத்திய அரசின் பக்கமிருந்து கர்நாடகத்தை நோக்கித் திருப்புவதாக உள்ளது.

கர்நாடக மாநிலத் தேர்தலைக் காரணம் காட்டி மத்திய அரசு கால அவகாசம் கேட்டாலும் 2019 பாரளுமன்ற தேர்தல் வரை தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கும் எந்த முடிவையும் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கமாட்டார் என்பதே உண்மை.

காவிரி உரிமை நீதிமன்றத்தால் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. மக்களின் போராட்டங்கள்தான் அந்த உரிமையை மீட்டெடுக்கும். அதைதான் இன்றைய உச்சநீதிமன்ற நடவடிக்கை உறுதிசெய்கிறது. எனவே, காவிரி உரிமையை மீட்கவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மத்திய பாஜக அரசுக்கு எடுத்துக்காட்டவும் வலுவான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தமிழக மக்கள் தயாராக வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.’’