''குறுகிய காலத்தில் எகிறிய சொத்து...'' தங்கமணி மீதான முதல் தகவல் அறிக்கை!

 First information report on Thangamani!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், இன்று (15.12.2021) முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்கள் என நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 69 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, கர்நாடகா, ஆந்திரா என மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணி மகன் தரணிதரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல், சேலம் ரெட்டிபட்டியில் உள்ள அஷ்வா பார்க் ஹோட்டல் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வசந்தி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. வேலூரில் காட்பாடி அருகே செங்குட்டையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

 First information report on Thangamani!

தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கமணி அமைச்சராக இருந்த 23.05.2016 முதல் 06.05.2021 தேதி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோது தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் பெயரில் 1,01,86,017 ரூபாய் சொத்து இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் 8,47,66,318 ரூபாய் சொத்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. இதனால் 7,45,80,301 ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் அதிகரித்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. செலவினம் போக 4,85,72,019 ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk raid thangamani
இதையும் படியுங்கள்
Subscribe