
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (மே ஏழாம் தேதி) நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ''மத்திய அரசின் நிர்பந்தத்தால் விடுதலைப் புலிகள் மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை. இப்பொழுதும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற என்னுடைய ரிட் மனு உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. அண்மையில் கூட நரேந்திர மோடி இலங்கைக்கு சென்றார். எதற்காக சென்றார் ராஜபக்சே கொடுக்கின்ற பாயாசத்தையும் புட்டுவையில் சாப்பிடுவதற்காகவா போனார். அங்குள்ள ஈழத் தமிழ் பிரதிநிதிகளை அழைத்து உங்களுடைய குறைகள் என்ன என்று கேட்டாரா? தமிழக மீனவர்கள் நாள்தோறும் கொல்லப்படுகிறார்களே,படகுகள் பறிக்கப்படுகிறதே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அங்கு பேசினாரா? அல்லது தமிழர்களுடைய உரிமையை, கோரிக்கையை பரிசீலிக்க ஒரு சர்வதேச குழுவை அமைத்து அதற்குப் பிறகு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் முதன் முதலில் பெல்ஜியத்தில் எடுத்து வைத்த கருத்தை அவர் ஆதரிக்க தயாரா?
தமிழர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டு மக்கள், விவசாயிகள், விவசாயிகள் பிரச்சனைக்காக நான் மொத்தம் 6000 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் நானும் தோழர்களும் நடந்து இருக்கிறோம். பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் போர் ஏற்பட வேண்டும் என்று பலத்த குரல் கொடுக்கிறார்கள். அந்த தீவிரவாதிகளை பயங்கரவாதிகளை அடக்கி ஒடுக்குவதற்கும், துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு அவர்களை விரட்டி அவர்களுடைய உயிர்களை வாங்குவதற்கும் நாங்கள் ஒரு முகமாக ஆதரிக்கிறோம். ஆனால் நரேந்திர மோடியும், அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் யுத்தம் வேண்டும் என சொல்கிறார்களே. யுத்தத்தில் எத்தனை குழந்தைகள் கொல்லப்படுவார்கள்; எத்தனை பெண்கள் கொல்லப்படுவார்கள்; எத்தனை வயது முதிர்ந்தவர்கள் கொல்லப்படுவார்கள்; தீவிரவாதத்திற்கு சற்றும் தொடர்பில்லாத லட்சக்கணக்கான பாகிஸ்தான் மக்கள் கொல்லப்படுவார்கள். அவர்கள் பதிலுக்கு வீசுகின்ற குண்டுகளில் இங்கே இருக்கின்ற அப்பாவி மக்கள், குழந்தைகள், தாய்மார்கள் இந்தியாவில் கொல்லப்படுவார்கள். அப்படி ஒரு யுத்தத்தை தேடுகிறதா பாகிஸ்தான். அப்படி ஒரு யுத்தத்தை திணிப்பதற்கு இந்திய அரசு முனைகிறதா? கொரியா சண்டைக்கு பிறகு உலகளாவிய யுத்தம் வந்துவிடக்கூடாது என்று உலக நாடுகள் எல்லாம் அக்கறையோடு இருக்கும் பொழுது இவர்கள் போர் வேண்டும், யுத்தம் வேண்டும் என்கிறார்கள். இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தீவிரவாதிகள் தேடிப்பிடித்து ரவை ரவையாக குண்டுகளை செலுத்தி தலைகளை வாங்கி அவர்களை ஒழித்துக் கட்டுங்கள். சபாஷ் செய்வோம். ஆனால் அப்பாவி இஸ்லாமியர்கள் என்ன செய்தார்கள்?''என்றார்.