Skip to main content

கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தங்கர் பச்சானை அறிவித்தது பாமக!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Film director Thangar Bachan announced as CM candidate for Cuddalore Parliamentary Constituency

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக வேட்பாளராக கடலூர் பாராளுமன்றத் தொகுதியில் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பல்வேறு முகங்களைப் பெற்றுள்ள தங்கர் பச்சான் போட்டியிடுகிறார் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் கிராமத்தில் பச்சான்-லட்சுமி தம்பதியினருக்கு 1961 ஆம் ஆண்டு 9வது பிள்ளையாகப் பிறந்துள்ளார். இவரது தந்தை மரபு வழி தெருக்கூத்து கலைஞர் ஆவார். இவரது இயற்பெயர் தங்கராசு பின்னர் இவரது பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்துக்கொண்டு தங்கர் பச்சான் என மாற்றிக்கொண்டார். இவர்  திரைப்படக் கல்லூரியில் ஒளி ஓவியம் கற்று, ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று திரைப்பட கலையை அறிந்தவர். இவர் நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவரது நூல்களை ஆராய்ச்சி செய்து 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாட நூலாக உள்ளது. இவர் தமிழ்த் திரையுலகில் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார்.

இவர் இயக்கி நடித்துள்ள பள்ளிக்கூடம் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கர் பச்சானுக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், விஜித் பச்சான், அரவிந்த் பச்சான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாமக தங்கர் பச்சானை வேட்பாளராக அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்பப் பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசிய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.