Skip to main content

பெண் திருமண வயதை 21 ஆக்குவதே சமூக, சத்துக்குறைவு சிக்கலுக்கு தீர்வு! -ராமதாஸ்

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
Ramadoss

 

 

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விடுதலை நாள் விழாவில் செங்கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். பிரதமரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

 

உலகில் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் வாழும் நாடுகளில்  இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அதற்கான காரணங்களில் முதன்மையானது பெண்களுக்கு இளம் வயதில் திருமணமாவதும், இளம் வயதிலேயே அவர்கள் தாய்மையடைவதும் தான். அவர்களின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு குழந்தைகளுக்கும் நீடிப்பதால் இந்தியாவில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவது  மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பெண்களின் திருமண வயது 21-ஆக  உயர்த்தப் பட்டால், அது நுண்ணூட்டச்சத்துக் குறைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை. அந்த வகையில் மத்திய அரசின் திட்டம் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

 

உடல்நலம் மற்றும் நுண்ணூட்டச்சத்து சார்ந்த பிரச்சினைகள் மட்டுமின்றி, சமூகச் சீரழிவுகள் சார்ந்த  சிக்கல்களை தடுப்பதற்கும் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டியது அவசியமாகும். பதின்வயதில் உள்ள பெண் குழந்தைகள் காதல் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாத வயதிலேயே  காதலில் விழுவதும், அவர்கள் சார்ந்த உடமைகளுக்காக வீழ்த்தப்படுவதும் அதிக அளவில் நடக்கின்றன. பெரும்பான்மையான காதல்கள் பெண்ணின் அன்பை இலக்காகக் கொள்ளாமல், பெண் சார்ந்த குடும்பத்தின் சொத்துகளை இலக்காகக் கொண்டே அரங்கேற்றப்படுகின்றன. இத்தகைய பக்குவமற்ற காதலின் விளைவாக நடைபெறும் திருமணங்களில் பெரும்பாலானவை ஒரு சில ஆண்டுகளிலேயே தோல்வியடைகின்றன. அதனால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமின்றி, அந்த பெண்ணின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொள்ளும் சோகங்களும் அதிகமாக நடக்கின்றன. அவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

 

இதற்கான ஒரே தீர்வு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது தான் என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் பக்தவச்சலா, கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு, 12.05.2011 அன்று அளித்தத் தீர்ப்பில் உறுதியாக பரிந்துரைத்துள்ளது. ‘‘இந்திய பெரும்பான்மையினர் சட்டத்தின்படி, ஒரு மைனரின் சொத்துக்களுக்கோ/அவருக்கோ பாதுகாவலராக இன்னொருவர் நியமிக்கப்படும்போது, மைனருக்கு 21 வயது நிறைவடையும் போது தான் அவர் மேஜராகிறாரே தவிர, அதற்கு முன்பாக இல்லை. எனவே, 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண் தங்களுக்கு ஏற்ற துணையா? என்பதை பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டு, அந்த முடிவுக்காக பின்னர் தான் வருத்தப்படுகின்றனர். இதைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்’’ என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

அதேபோன்ற வழக்கில், 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் மணிக்குமார், ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘பெண்கள் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கும், வாக்குரிமை பெறுவதற்கும் வேண்டுமானால் 18 வயது சரியானதாக இருக்கும். ஆனால், காதலித்து மணம் புரிவதற்கான பக்குவமும், உளவியல் முதிர்ச்சியும் 18 வயதில் நிச்சயமாக கிடைக்காது. எனவே, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து அரசு ஆராய வேண்டும்’’ என்று பரிந்துரைத்துள்ளது. ஆணுக்கு இணையாக பெண்ணின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்று சட்ட ஆணையமும் 2018-ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறது.

 

இந்தியப் பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆனால், அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. பக்குவமற்ற வயதில் வரும் காதலும், திருமணமும் தான்  பெரும்பான்மையான பெண்களின் சாதனைகளுக்கு தடையாக உள்ளன. பெண்கள் சாதிப்பதற்கு வறுமையை விட பெரும் சுமையாக இருப்பவை இந்த இரண்டும் தான். அந்தத் தடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். பெண்கள் கல்வியிலும், பிற துறைகளிலும் சாதனை படைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.