“வெளியேறிய ஒன்றியம்; உலகுக்கு காட்டும் தமிழ்நாடு” - மத்திய அரசை சாடும் எம்.பி.

“Exited Union; Showing Tamilnadu to the world”- MP slams the central government.

கீழடி அருங்காட்சியகம் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் செய்த ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றுள்ளார். அங்கு ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார். சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் தொடர்ச்சியாக மாலை 6 மணியளவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். கீழடி அருங்காட்சியகம் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வுகள் நடந்துள்ளன. 8 கட்ட அகழ்வாய்வினையும் சேர்த்து 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் யாவும் அருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதை முன்னிட்டு எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் தனது கருத்தினை பதிவிட்டு இருந்தார். அவரது பதிவில், “அன்று எதிர்கட்சித் தலைவராக கீழடியை பார்வையிட வந்தார். இன்று முதலமைச்சராக கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்க வருகிறார். எதுவும் இல்லையெனச் சொல்லி வெளியேறியது ஒன்றிய அரசியல். “எதுவெல்லாம் இருக்கிறது பார்…” என உலகிற்கே காட்சிப்படுத்துவது தமிழ்நாட்டு அரசியல். முதல்வரே வருக வருக” எனப் பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்
Subscribe