/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/samy ttv 450.jpg)
டி.டி.வி. தினகரனின் முக்கிய ஆதரவாளரும், மதுரை மேலூர் முன்னாள் எம்எல்ஏவுமான சாமி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
மறைந்த சாமி மேலூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2001, 2006, 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர். கடந்த முறையும் மேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அவரது உடல்நிலையை கருதி அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி அணி, சசிகலா அணி என பிரிந்ததும், சசிகலா அணியில் தினகரனுக்கு பக்க பலமாக இருந்து வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார். ஆளும் கட்சியின் நெருக்கடிகளை எதிர்த்து பொதுக்கூட்டத்தை நடத்தவும், கூட்டத்தில் ஆட்களை திரட்டவும் சாமிதான் சரியான நபர்என்று மேலூரை தேர்வு செய்து அங்கு கட்சியை தொடங்கினார் டிடிவி தினகரன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/samy ttv 4555.jpg)
மேலூரை அதிமுகவின் கோட்டையாக கடந்த 20 வருடங்களாக வைத்திருந்ததில் சாமிக்கு முக்கிய பங்கு உள்ளது. மதுரையில் 10 தொகுதிகளில் உள்ள மக்களுக்கு மிகவும் பரிச்சையமானவர், இருமுறை திமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் மேலூரில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். மாவட்டச் செயலாளராக இருப்பதற்கான தகுதி உள்ளவர், அந்த அளவுக்கு கூட்டத்தை நடத்தவும், ஆட்களை திரட்டவும் அவரால் முடியும், திமுகவை எதிர்த்து வேலை செய்யவும், திமுகவினரிடம் நெருக்கமும் வைக்கக்கூடியவர் சாமிதான். மேலூரில் சொந்த செல்வாக்கு உள்ள சாமியை வைத்துதான் 10 தொகுதிகளிலும் தனக்கான ஆதரவை திரட்டி எடப்பாடி அணிக்கு ஆட்டம் காட்டலாம் என்று நினைத்திருந்தார் டி.டி.வி. தினகரன்.
கடந்த மூன்று வருடங்களாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சாமியை, இன்று சந்திக்க வருவதாக தெரிவிந்திருந்தார் தினகரன். இந்த நிலையில் சாமி காலமானார் என்ற செய்தி வந்ததும் கடும் அதிர்ச்சியடைந்தார் தினகரன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)