ADVERTISEMENT

“எது பெருமை எது சிறுமை என்று தெரியாதவர் தான் முன்னாள் அமைச்சர்” - அதிமுக மாஜியை விளாசிய நாராயணன் திருப்பதி

10:18 PM Mar 13, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள வி.புதூர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட நிகழ்வு அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய கடம்பூர் ராஜு, “என் மனைவி ஜெயலலிதாவைவிட 1000 மடங்கு பெரியவர் என அண்ணாமலை சொல்கிறார். அரசியலில் கத்துக்குட்டி அன்ணாமலை. முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு ஜெயலலிதா செல்லும் போது நாட்டில் உள்ள அத்துனை முதலமைச்சர்களும் எதிர்பார்த்து நின்று வரவேற்பார்கள். ஐபிஎஸ் ஆகி ட்ரான்ஸ்ஃபரில் இங்கு வந்துள்ளார். ரெபுடேஷன். அரசியலுக்கு ரெபுடேஷனில் வந்தவர் அண்ணாமலை. நாளை அரசியல் மாற்றம் வந்தால் மீண்டும் ஐபிஎஸ் வேலைக்கு எழுதிக் கொடுத்து சென்று விடுவார். கூட்டணிக் கட்சி என்பதால் மதிக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் கடம்பூர் ராஜு பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியுள்ளதோடு மரியாதைக் குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் அவன் இவன் என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு அரசியலில் கத்துக்குட்டி என்று விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு. டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுக தான் என்பதை கடம்பூர் ராஜு உணர வேண்டும். தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் அண்ணாமலையின் அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல.

மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தமிழகத்தில் தான் என்பதையும் மோடியின் தலைமையில் உள்ள பாஜக அரசுக்கு மாற்றாக கண்ணுக்கெட்டிய காலம் வரையில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என்று தெரியாமல் பேசுகிறீர்கள். அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பெருமைப்படுத்தியே பேசினார் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத, ஒரு சிறந்த தலைவரை போல் தான் இருப்பேன் என்று அண்ணாமலை பேசியதில் ஜெயலலிதாவின் உறுதியான தன்மையை உணர்த்தித்தான் என்பதையும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றும் தெரியாத கத்துக்குட்டி கடம்பூர் ராஜு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எது பெருமை எது சிறுமை என்பது கூட புரிந்து கொள்ள முடியாதவர் செய்தித் துறை அமைச்சராக எப்படி இருந்தார் என்பது வியப்பளிக்கிறது. கட்சியை அண்ணாமலையே காலி செய்து விடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள். நெருக்கடி நேரங்களில் கை கொடுத்து தோளோடு தோள் நின்றவர்களை அவதூறு பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சியுங்கள். இல்லையேல் காலம் பதில் சொல்லும்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT