Skip to main content

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு.... பொதுமக்கள் காத்திருப்பு...

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

evm machines fault in tamiladu

 

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி மற்றும் வீரப்பன்சத்திரம் அரசு பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் தேர்தல் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருகின்றனர். மேலும் பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவில் தாமதம் நிலவுகிறது. 

சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள செரியலூர் இனாம் வாக்குச்சாவடியில் இயந்திங்கள் இயங்கவில்லை நீண்ட நேரமாக வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள். பழுது நீக்கும் பணி தீவிரம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு! - பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

vote counting centres chidambaram police and journalist

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் தினமும் கண்காணிப்பு அறைக்குச் சென்று காணொளி காட்சி மூலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு வருகின்றனர். 

 

அதேபோல், அவ்வப்போது வேட்பாளர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (21/04/2021) சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன், புவனகிரி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழித் தேவன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிடச் சென்றபோது அவருடன் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் அனைவரும் புகைப்படம் எடுக்கச் சென்றனர். 

 

vote counting centres chidambaram police and journalist

 

அப்போது பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி. சரவணகுமார் பத்திரிகையாளர்களைப் பார்த்து ஒருமையில் திட்டி வெளியேறுங்கள் என மிரட்டியுள்ளார். மேலும், அதிகார தோரணையில் 'வெளியே போ' என ஒருமையில் பேசினார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே சென்றுவர எங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதி உண்டு என்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

பத்திரிகையாளர்கள், ஏ.டி.எஸ்.பி. சரவணகுமாரை பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க போரட்டத்தை முடித்துக் கொண்டனர். ஏ.டி.எஸ்.பி.யின் செயல்பாட்டுக்குப் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "எங்களுக்கு மாவட்டத் தேர்தல் அலுவலர் என்ன உத்தரவு கொடுத்துள்ளாரோ அதன்படி தான் செயல்படுகிறோம். எனவே, மாவட்டத் தேர்தல் அலுவலரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பத்திரிகையாளரை உள்ளே அனுமதிக்க முடியும். அனுமதி இல்லாமல் உள்ளே வந்ததால் பத்திரிகையாளர்களை வெளியேற்றினோம். இதில் எங்கள் தவறு ஒன்றும் இல்லை" என்கின்றனர்.

 

அதேபோல் சிதம்பரம் பத்திரிகையாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ரமேஷ் கூறுகையில், "பத்திரிகையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு என்று தனி அனுமதி கிடையாது. அனைத்து இடங்களுக்கும் அனுமதி உண்டு. வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே என்ன நடைபெறுகிறது என்பதை வெளியில் சொல்வதற்காகத்தான் பத்திரிகையாளர்கள் உள்ளே செல்கிறார்கள். பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் உள்ளே என்ன நடப்பது என்பது மக்களுக்குத் தெரியாது. எனவே தேர்தல் ஆணையம், பத்திரிகையாளரை காவல்துறையினர் தடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார். 
 

 

 

Next Story

பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு... புதிய மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு...

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இந்த மூன்று பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

 

political reservation for scheduled caste extended

 

 

70 ஆண்டுகளுக்கு இந்த இடஒதுக்கீடு தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன் இந்த இடஒதுக்கீடு முடிவடைகிறது. இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது, அதன்படி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கான இடஒதுக்கீடு நீடிக்கப்படவில்லை.

இந்த இடஒதுக்கீட்டு மசோதாவில் ஆங்கிலோ இந்தியன் பிரிவை மட்டும் தவிர்த்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது இதுகுறித்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 296 ஆங்கிலோ இந்தியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 84 பட்டியல் இன உறுப்பினர்களும், 47 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். மாநில சட்டசபைகளில் 614 பட்டியல் இன உறுப்பினர்களும், 554 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில், மேற்கண்ட இரண்டு இனத்தினரும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இருப்பினும் என்ன காரணத்துக்காக, இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதோ, அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்கு இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிவரை இடஒதுக்கீடு நீடிக்கும்" என தெரிவித்தார். பின்னர் நடந்த இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 352 பேரும் வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதனையடுத்து மசோதா நிறைவேறியது.