ADVERTISEMENT

'தமிழ்நாட்டை தாண்டினால் எல்லாரும் ஒன்றுதான்' - டெல்லியில் நடந்த இரு துருவ சந்திப்பு!

08:42 AM Jul 07, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்மையில் தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு கட்டியிருந்த யார்கோல் அணை விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதியிருந்த கடிதம் போன்றவை விவாதத்திற்குள்ளான நிலையில், நேற்று (06.07.2021) டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். 30 நிமிடம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார்." மேலும். அவர் பேசுகையில்,

"உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய டிஎம்சியில் 8 டிஎம்சி கூட கிடைக்கவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என அமைச்சரை கேட்டுக்கொண்டேன். தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல், முன்கூட்டியே அறிவிக்காமல் மத்திய அரசிடமிருந்து டிபிஆர் வாங்கியுள்ளனர். டிபிஆர் வாங்கினால் மட்டுமே அணை கட்ட முடியாது. உடனடியாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்" என்றார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் துரைமுருகனை தமிழ்நாடு பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் இல்லத்தின் வாயிலில் சந்தித்தனர். இரு துருவங்கள் சந்திப்பு என அருகில் இருந்தவர்கள் கூறியபோது, "தமிழ்நாட்டைவிட்டு தாண்டினால் எல்லாம் ஒன்றுதான்" என அவருடைய பாணியில் சிரித்தபடியே அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT