Advertisment

“மீண்டும் பாஜகவிற்கு செல்வேன்” - ஈஸ்வரப்பா திட்டவட்டம்!

Eshwarappa says I will go back to BJP

Advertisment

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். மேலும், முதற்கட்டமாக நடைபெறும் 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா, ஹவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.ஈ. கந்தேஷ் போட்டியிட பா.ஜ.க தலைமைக்கு வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், அம்மாநில பா.ஜ.க தலைவர் பி.ஓய். ராகவேந்திரா, அந்த வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சி மீது அதிருப்தியில் இருந்த கே.எஸ். ஈஸ்வரப்பா, இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக கே.எஸ். ஈஸ்வரப்பா அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கலானது கடந்த 19ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது கே.எஸ். ஈஸ்வரப்பா, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இத்தகைய செயல் பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

Eshwarappa says I will go back to BJP

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தராததால் சுயேச்சையாக போட்டியிட்ட கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஷிவமோகா தொகுதியில் பாஜக வேட்பாளர் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவிக்கையில், “கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். இன்னும் நம்பிக்கை உள்ளது. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டத்திற்குப் பயப்படவில்லை. இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வுக்கு செல்வேன். 5 முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe