Skip to main content

இளங்கோவன் வைத்த கோரிக்கை... ஏற்றுக்கொண்ட ஸ்டாலின்... குமுறும் திமுகவினர்...

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

erode election dmk candidate issue

 

தி.மு.க. சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார், மாவட்ட துணைச்செயலாளர் ஆ.செந்தில்குமார் என இருவரில் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் தொகுதியைக் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டது தி.மு.க. தலைமை. இத்தொகுதியில் உள்ள இரண்டு லட்சம் வாக்காளர்களில் ஒரு லட்சத்திற்கு மேல் செங்குந்த முதலியார் சமூக மக்கள் உள்ளனர். தி.மு.க.வில் சீட் கேட்ட இருவரும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொடுத்த அழுத்தமே... தொகுதியைக் கூட்டணிக்கு தர வைத்துவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.  

 

"ஈரோடு கிழக்கு தொகுதியில்தான் எனது வீடு உள்ளது. அந்தத் தொகுதி எனது மகன் திருமகன் ஈ.வெ.ரா.வுக்காகத்தான் கேட்டுள்ளேன்'' என தி.மு.க.விடம் இளங்கோவன் கூறியுள்ளார்.

 

மு.க.ஸ்டாலின் வேறு தொகுதியை பரிந்துரைத்த நிலையில்... "அந்தத் தொகுதியில்தானே எங்கள் குடும்பம் இருக்கிறது. என் மகனுக்காக அந்தத் தொகுதியை நீங்கள் தர வேண்டும்'' என நேரடியாக ஸ்டாலினிடம், இளங்கோவன் கேட்டதால் வேறு வழியில்லாமல் அந்த தொகுதியை தி.மு.க. தலைமை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இது தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமில்லாமல், தொண்டர்களையும் வேதனைப்படுத்தியுள்ளது.

 

"ஈரோடு கிழக்கில் தி.மு.க. வேட்பாளராக முதலியார் சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என தி.மு.க. தலைமை நினைத்ததை காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் பறித்துவிட்டார்'' என தி.மு.க.வினர் குமுறத் தொடங்கினார்கள்.

 

இது ஒருபுறமிருக்க, ஈரோடு பகுதியில் உள்ள அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் "காங்கிரஸ் கட்சி தங்களது இடத்தை பறித்துக்கொண்டது, இதற்கான எதிர்ப்பை தேர்தலில் காட்டுவோம்'' என கூறியிருப்பதோடு, இந்தத் தேர்தலில் தங்களுக்கான எதிர்ப்பு நிலை என்ற அளவில் சுமார் 300க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை தொகுதியில் களம் இறக்க வேகம் காட்டி வருகிறார்கள்.

 

அப்படி போட்டியிட்டால், பெரும்பாலும் ஏப்ரல் 6ஆம் இத்தொகுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள். ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் 1996ஆம் வருடம் மொடக்குறிச்சியில் போட்டியிட்டார்கள். அப்போது அத்தொகுதி தேர்தல் இரண்டு மாதங்கள் தள்ளிப் போனது. அதேபோல், தற்போது இந்த தொகுதியில் நடந்தால், இந்த தொகுதி தேர்தலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவே அஞ்சப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்