Erode East Constituency By-election; Ready ADMK

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையொட்டி வர உள்ள இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வெற்றிபெற வேண்டும் என அக்கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் அ.தி.மு.க. கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

Advertisment

ஈரோடு அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் பங்கேற்றார். பின்னர் அவர் பேசும்போது,"திமுக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது சொத்து வரி, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு காரணமாகஒவ்வொரு குடும்பத்தின் மீதும் குறைந்தபட்சம் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் வரை இந்த அரசு சுமையை ஏற்றி உள்ளது. அதனால் பொதுமக்கள் திமுக மீது மிகவும் வெறுப்புடன் உள்ளனர்.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கலின் போது ரூபாய் 2500 வழங்கினார். அப்பொழுது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 5000 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறினார். ஆனால், கடந்தாண்டு பொங்கலுக்கு எந்த நிதி உதவியும் அவர் செய்யவில்லை. மாறாக தரம் குறைந்த மளிகை பொருட்களை மக்களுக்கு வழங்கினார். தற்போது ரூபாய் 1000 மட்டும் மக்களுக்கு வழங்குகிறார். அதிமுக திருவண்ணாமலையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தி கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதால் மக்களுக்கு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், தாலிக்கு தங்கம் போன்றவைகூட நிறுத்தப்பட்டுவிட்டன. அப்போது சட்டம் ஒழுங்கு நன்றாக சிறப்பாக இருந்தது. தற்பொழுது தெருவுக்குத் தெரு சட்டவிரோதமாக டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. மக்களை மதுவுக்கு அடிமையாக்கி எப்போது மயக்கத்தில் இருக்கும் நிலையை உருவாக்கி உள்ளனர். எனவே இந்த ஆட்சிக்கு பாடம் கற்பிக்க 2026 இல் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர, ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நாம் நிரூபிக்க வேண்டும்." என்றார்.

Advertisment

மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க. இப்போதே தயராகிவிட்டது.