Advertisment

“செருப்பை மாலையாக அணிந்து வந்தது காரணமாகத்தான்” - சுயேட்சை வேட்பாளர் சுவாரசியம்

Erode East By-election; The candidate wore sandal as garland

Advertisment

செருப்பு மாலை அணிந்து சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என கோஷ்டி யுத்தமும்., அதைத் தொடர்ந்து கூட்டணி குழப்பம்; வேட்பாளர் தேர்வு; கட்சி சின்னம் இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு வராத சூழ்நிலையில் தேர்தல் பணிக்குழு மட்டும் அறிவித்து களத்தில் இருப்பதாக அதிமுக காட்டிக் கொண்டாலும் ஒரு சுறுசுறுப்பு எதுவும் தெரியவில்லை.

Advertisment

இரண்டாவது கட்சியாக தேமுதிகவும் மூன்றாவது கட்சியாக அமமுகவும் வேட்பாளரை அறிவித்தது. தொடர்ந்து நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மூன்று சுயேச்சைகள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். தொடர்ந்து 4-வதாக கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த நூர்முகமது (63) தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். அப்போது செருப்பை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு வந்தது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது, “நான் இதுவரை எம்.எல்.ஏ, எம். பி., வார்டு கவுன்சிலர் என 40 முறை தேர்தலில் நின்று உள்ளேன். தற்போது 41வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன். மக்களுக்காக நாயாக உழைத்து அவர்கள் கால்களுக்கு செருப்பாக இருப்பேன் என்பதை உணர்த்துவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன். மக்கள் உண்மையிலேயே தங்களுக்காக யார் உழைப்பார்கள் என்று தெரிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது” என்றார்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe