Skip to main content

ஈரோடு இடைத்தேர்தல்: முடிவை அறிவித்த சமகவின் சரத்குமார்

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

Erode by-election; Sarathkumar announced the result

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.

 

அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் தனித்துப் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அதன் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்று மாலை உயர்மட்ட குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கட்சியினருக்கும்; யாருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

விருதுநகர் தொகுதியில் ராதிகாவுடன் பைக் சவாரி! சின்ராசாக மாறிய சரத்குமார்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பிரச்சார அனல் கடுமையாக வீசுகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரச்சார வாகனத்தில் நின்றவாறு மைக் பிடித்து ஆதரவு கேட்கும் வழக்கமான நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்ட வேட்பாளராகத் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்.

ராதிகா செல்லுமிடமெல்லாம் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. சூர்யவம்சம் சின்ராசு என்று பிரச்சாரத்தில் தன் கணவர் சரத்குமாரைப் பெருமிதமாகச் சொல்லிவந்தார். சூர்யவம்சம் சினிமாவில் சின்ராசு, தன்னுடைய காதலியை பைக்கில் அழைத்துச் செல்வார். இந்தத் தேர்தல் களத்தில் நிஜத்திலும்,  தன் மனைவி ராதிகாவை பைக்கிலேயே  பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

திரையுலக நட்சத்திரங்களாக இருந்தும், சாதாரண மனிதர்களைப்போல், பொதுவெளியில் ராதிகாவும் சரத்குமாரும் டூ வீலரில்  செல்வது, விருதுநகர் தொகுதி வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.