ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தலுக்கான பணிகள் தொடங்கிமுழுவீச்சில் அதற்கானஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் தேர்தல் பிரிவுக்கென தனி அலுவலகம் (தேர்தல் கட்டுப்பாட்டு அறை) தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தத்தேர்தல் கட்டுப்பாட்டு அறைஇன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி தலைமையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசாருடன் செயல்படத்தொடங்கி உள்ளது. தற்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி வாக்காளர் எண்ணிக்கை, பதற்றமான வாக்குச்சாவடிகள் போன்ற விவரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.