Erode By-Election: BJP Goes Alone; Annamalai candidate?

Advertisment

பனிக்காலத்தின்கடுங்குளிரைவிரட்டியடித்து தமிழக அரசியல் களத்தை வெப்பச்சலனமாகசூடாக்கிவிட்டது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு. இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின்திருமகன் ஈவேரா அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 4 ஆம் தேதி தான் இத்தொகுதியின் எம்எல்ஏவான திருமகன் இறந்தார். இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்க ஓரிரு மாதங்களாகும் என அரசியல் கட்சிகள் காத்திருக்க, அவர்இறந்த அடுத்த 14 நாட்களிலேயே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. ஜனவரி 31 இல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத்தழுவினார்.

Advertisment

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், இம்முறையும் ஈரோடு கிழக்கு தொகுதியினை தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டுள்ளதாகத்தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், மற்றொருபுறம்அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தனித்து நின்று சந்திக்க இருப்பதாகவும்தகவல்வெளியாகியுள்ளது. அதன்படி வேட்பாளராக அண்ணாமலை களமிறங்கலாம் என்றும் தெரிகிறது. இதற்கு முதற்கட்டமாக பாஜக தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும் ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைத்துள்ளது. அதில் வேதானந்தம், சரஸ்வதி எம்எல்ஏ, பழனிசாமி என 14 பாஜக நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக,பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில், “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடச் சவால் விடுகிறேன்.அப்படிப் போட்டியிட்டால் நான் உங்களை எதிர்த்து நிற்பேன் என்றும் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள்.நீங்கள்தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடாஎன்று பார்ப்போம்”எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.