Advertisment

ஆதரவு கூட்டம் நடத்த தயாரா? அந்த தைரியம் இருக்கிறதா? பிஜேபி அதிமுகவுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

E.R.Eswaran

அதிமுக, பிஜேபி கட்சியினர் தங்கள் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவு கூட்டம் நடத்த தயாரா?அந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசினுடைய மூன்று வேளாண்மை சார்ந்த மசோதாக்களும் அதிமுக ஆதரவோடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஜனநாயக நெறிமுறைகளை புறந்தள்ளிவிட்டு டெல்லி மாநிலங்களவையில் சர்வாதிகார போக்கோடு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Advertisment

இந்தியா முழுவதும் இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கொதித்தெழுந்து சாலையில் இறங்கி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் மத்திய அரசு நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதாக இல்லை. தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து ஆதரவாக அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக அதிகாரிகளும் ஆதரவாக பேச நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் எழுச்சியாக போராட்டம் நடத்தி வலிமையாக எதிர்ப்புகளை பதிவு செய்திருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு இது செல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் அந்த கட்சியில் இருக்கின்ற விவசாயிகள் இந்த சட்டங்களால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை புரிந்திருந்தும் செய்வதறியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்கள். நெஞ்சு பொறுக்காமல் அதில் ஒரு சிலர் பச்சை துண்டுகளோடு எதிர்க்கட்சியின் போராட்டத்தில் கலந்து கொண்டதையும் காண முடிந்தது.

கொண்டுவரப்பட்டிருக்கின்ற வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் எதிரானது என்று மாநிலங்களவையில் அதிமுக கருத்துக்களை பதிவு செய்துவிட்டு பிறகு ஆதரித்திருப்பது விந்தையாக இருக்கிறது. மக்களால் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இவ்வளவு சூதோடு செயல்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்கள் எவ்வளவு விவரமாக இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

தமிழக மக்களுடைய ஆதரவும் எதிர்கட்சிகளோடு இருக்கிறது என்பதை இந்த போராட்டம் தெளிவாக காட்டியிருக்கிறது. இந்திய விவசாயிகள் அனைவரும் எதிர்க்கின்ற புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி கொண்டிருக்கின்ற அதிமுக, பிஜேபி கட்சியினர் தங்கள் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவு கூட்டம் நடத்த தயாரா ?. அந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?”என கேள்வி எழுப்பியுள்ளார் ஈஸ்வரன்.

agriculture kmdk E.R.Eswaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe