Advertisment

விவசாயிகளுடைய அனைத்து விதமான கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கொமதேக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

E.R.Eswaran

ஊரடங்கு சமயத்தில் மக்களுக்கு உணவளித்த விவசாயிகளுடைய கடன்களைத்தள்ளுபடி செய்ய வேண்டும் என கொமதேக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்களோடு காணொலி காட்சி மூலம் கலந்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவர்கள் செவிலியர்களைப் போல மற்றும் காவல்துறை அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்களைப் போல விவசாயிகளும் கரோனா பாதிப்பைப் பொருட்படுத்தாமல் விவசாய விளைபொருட்களை அறுவடை செய்து காய்கறி சந்தைகளுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.

Advertisment

ஊரடங்கு நேரத்தில் அனைத்து மக்களுக்கும் தடையில்லாமல் அத்தியாவசியப் பொருட்களை கிடைக்க செய்ததில் விவசாயிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதிக்கின்றது. ஆனால் விவசாயிகள் அந்தப் பொருட்களைச் சந்தைக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது கரோனா பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படும் என்பதை அரசு யோசிக்க மறந்து இருக்கிறது.

விவசாயிகள் ஊரடங்கு நேரத்தில் உற்பத்தி செய்யலாம், பொருட்களைச் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம் என்று அறிவித்திருப்பது விவசாயிகள் நலன் கருதியா? அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுவார்கள் என்ற எண்ணம் கொண்டா? விவசாயிகளும் கரோனாவுக்குப் பயந்து வீடுகளிலேயே தங்களை முடக்கி கொண்டிருந்தால் பல லட்சக்கணக்கான பேர் பசியாலும் பட்டினியாலும் உயிர் இழந்திருப்பார்கள்.

கரோனா தனக்குப் பாதித்தாலும் பரவாயில்லை என்று அனைத்து மக்களுக்கும் உணவளித்த விவசாயிகளுடைய தியாகத்தை அரசுகள் எண்ணிப் பார்ப்பதில்லை. நாடு முழுவதும் மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி செலுத்த உத்தரவிட்ட பாரத பிரதமர் விவசாயிகளுக்கு நன்றிதெரிவிக்கப்பாராட்டத்தவிர்த்தது ஏன்? பேச்சுக்குப் பேச்சு மருத்துவர்களுடைய தியாகத்தைக் குறிப்பிட்டு பேசுகின்ற தமிழக முதலமைச்சர் விவசாயிகளுடைய தியாகத்தைக் குறிப்பிடாதது ஏன்?

அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல தடைகளையும் அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாமல் ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் அனைவரும் கரோனாவை எதிர்த்து போராடுகின்ற வேள்வியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறார்கள். விவசாயதியாகிகளுக்கு அரசு தெரிவிக்கின்ற நன்றி என்பது அவர்கள் பயன் பெற கூடியதாக இருக்க வேண்டும்.

வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் தானும் தன் குடும்பமும் என்ன ஆவோம் என்று தத்தளித்துக் கொண்டிருக்கின்ற விவசாயிகளுக்கு வாங்கிய கடனிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும். விவசாயிகள் வாங்கி இருக்கின்ற அனைத்து விதமான கடனையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

http://onelink.to/nknapp

தேர்தல் நேரத்தில் தேர்தல் வெற்றிக்காக விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று அறிவிக்கிறவர்கள் இந்த நேரத்தில் கரோனா போரில் முன்னணியில் நின்று மக்களைக் காப்பாற்றி கொண்டிருக்கின்ற விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்யக்கூடாதா?விவசாயிகள் வாங்கி இருக்கின்ற அனைத்து விதமான கடனையும் தமிழக அரசு தள்ளுபடி செய்து நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

issue corona virus kmdk general secretary E.R.Eswaran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe