/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/er eswaran_0.jpg)
கருத்துரிமை என்ற பெயரில் கந்தசஷ்டி கவச பாடலை கொச்சைப்படுத்தி இருப்பது தமிழகத்தில் மத கலவரங்களை உண்டாக்க முயற்சிப்பதன் ஆரம்ப புள்ளி. தமிழக அரசின் உடனடி நடவடிக்கை தேவை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து மிகவும் கொச்சையாக பேசி, காணொளி வெளியிட்ட நபர் மீது தமிழக அரசும், காவல்துறையும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மத நல்லிணக்கத்தை கெடுத்து பதற்றத்தை உருவாக்கும் வகையில் காணொளிகளை வெளியிடும் நபர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களை ஆரம்பித்திலேயே முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும்.
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களாகவும், முருகபெருமானை வழிபடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் முருகபெருமான் பாடலான கந்தசஷ்டி கவச பாடலை கொச்சைப்படுத்தி கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருடைய மனதையும் வேதனைப்படுத்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இப்படி கொச்சையாக பேசிவிட்டு கருத்துரிமை என்ற வாதத்திற்கு பின்னால் யாரும் ஒளிந்து கொள்ள முடியாது. நீதிமன்றமே கருத்துரிமையின் எல்லைக்கு ஒரு அளவுகோல் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறது.
இதை போன்ற காணொளிகள் கோடிக்கணக்கான மக்களுடைய மனதை புண்படுத்தும் என்று தெரிந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையை கூட்டுகிறது. தமிழக அரசு ஏன் எதற்காக தயங்குகிறது. பலகோடி மக்களுக்கு எதிரான ஒரு கருத்தை ஒருவர் காணொளி மூலமாக அனைவருக்கும் சென்றுசேரும்படி செய்துவிட்டு தைரியமாக உலவி கொண்டிருப்பதற்கு என்ன காரணம். தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கை இதை போன்று இனி யாரும் அடுத்தவர் மனம் புண்படும்படி கொச்சைப்படுத்துகின்ற விதத்தில்வெளியிடுவதை பற்றி யோசிக்கக்கூட கூடாது.
இதுபோன்ற காணொளிகள் தமிழகத்தில் தேவையில்லாத பதற்றத்தையும், மத பிளவுகளையும் உருவாக்கி வன்முறை வெடிக்க காரணமாக அமைந்துவிடும். இதை பார்த்த தமிழக மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். எனவே தமிழக காவல்துறை கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனல் நிர்வாகத்தினர் மற்றும் காணொளியில் பேசியவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்”இவ்வாறு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)